கோவை:பெற்ற மகளை தினமும் அடித்து துன்புறுத்தி வந்த தாயால், உள்காயம் ஏற்பட்டு சிறுநீரகம் செயலிழந்து 10 வயது சிறுமி உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் இத்தகவல் தெரிந்ததையடுத்து, தாயை போலீசார் சிறையில் அடைத்தனர்.இந்த கொடூர சம்பவம் குறித்த விபரம்:கோவை, தெலுங்குபாளையம் மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 39. இவரது மனைவி சாந்தலட்சுமி, 33. தம்பதியின் மகள் அனுஸ்ரீ, 10; ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். மே 17ம் தேதி கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிர்ச்சி
சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, தட்சிணாமூர்த்தி செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.சிறுமியின் உடலில், 33 காயங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. போலீசார் சிறுமியின் தாய் சாந்தலட்சுமியிடம் விசாரித்தனர். இதில், அவர் மகளை அடித்து துன்புறுத்தியதே மரணத்துக்கு காரணம் என, தெரியவந்தது. அவரை போலீசார் சிறையில் அடைந்தனர். ரத்தக்கசிவு
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறுமி அனுஸ்ரீ நன்றாக படிக்கக் கூடியவர். இருப்பினும் சாந்தலட்சுமி மேலும் நன்றாக படிக்க வலியுறுத்தி, அடிக்கடி சிறுமியை கரண்டியால் அடித்துள்ளார். இதை, அருகில் வசிப்பவர்கள் உறுதி செய்தனர். பிரேத பரிசோதனையில், சிறுமியின் உடலில் பல இடங்களில், தசை கன்றிப் போய் இருந்தது தெரிந்தது.'தொடர்ந்து அடித்து வந்ததால், சிறுமிக்கு உள்காயம் ஏற்பட்டு, உடலின் பல்வேறு பகுதிகளில் தசை சிதைந்துள்ளது. இதனால் ரத்தம் கசிந்து, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது' என்றார்.