கோவை;தரமற்ற பொருட்களை கொண்டு வீடு கட்டிய கட்டுமான நிறுவனம், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.கோவை அருகேயுள்ள இருகூர், ஏ.ஜி.புதுாரை சேர்ந்தவர் ஆனந்த ரட்சகன். பாப்பம்பட்டி அருகே சொந்த வீடு கட்டுவதற்காக, பா.நா.பாளையத்திலுள்ள சன் பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்துடன், 2021, நவம்பரில் ஒப்பந்தம் செய்தார்.சதுர அடிக்கு, 1,900 வீதம், 510 சதுர அடிக்கு, 9.69 லட்சம் ரூபாய் செலுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். முதல் கட்டமாக, 4.38 லட்சம் ரூபாய் கொடுத்தார்.கட்டுமான பணி நடந்து வந்த நிலையில், வெளியூர் சென்ற ஆனந்த் ரட்சகன், ஐந்து மாதம் கழித்து சைட்டிற்கு சென்று பார்த்த போது, தரமற்ற பொருட்களால், அனுபவம் இல்லாதவர்களை வைத்து அரைகுறையாக கட்டியது தெரிய வந்தது. சுவர்கள் வெடித்து காணப்பட்டன. மழை தண்ணீரும் வீட்டிற்குள் கசிந்து வந்தது. 60 சதவீத பணி நடந்த நிலையில், 12.70 ரூபாய் கட்டுமான நிறுவனத்தினர் பெற்றனர்.இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணையின் போது, எதிர் மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''கட்டுமான நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், கூடுதலாக பெற்ற கட்டுமான தொகை, 6.24 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, இரண்டு லட்சம் ரூபாய், வழக்கு செலவு தொகை, 5,000 ரூபாய், மனுதாரருக்கு வழங்க வேண்டும்,''என்று உத்தரவிட்டார்.