பொள்ளாச்சி: வருண பகவானின் கருணையால், அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி ஆற்றில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆடி பெருக்கில் குறையாமல் ததும்பும் நீர் போல, விவசாயம் செழிக்க வேண்டும், வாழ்க்கை மேம்பட வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் இன்று பண்டிகையை கொண்டாட தயாராயினர்.ஆடி மாதத்தில் பெய்யும் பருவமழையால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்திருக்கும் நிலையில், பயிர் சாகுபடி செழிக்கவும், பருவம் தவறாது மழை பெய்ய வேண்டியும், ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம், 18ம் நாளில், பதினெட்டாம் பெருக்கு என கூறப்படுகிறது.இதனால், விவசாயிகள் ஆடி பட்டத்தில் சாகுபடி செய்து அமோக விளைச்சல் பெறுகின்றனர். இப்பருவத்தில், நெல், கரும்பு ஆகியன விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்வர். இந்நாளில், ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கொண்டாடி மகிழ்வர்.பொள்ளாச்சி பகுதியில், ஆடிப்பெருக்கு பண்டிகை ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரியத்தை கைவிடாமல் கடைபிடித்து வழிபாடு செய்து வருகின்றனர்.பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர்.அங்கு, பசு சாணத்தால் மெழுகி, அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் வைத்து அகல்விளக்கு ஏற்றுவர். தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுவர்.வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, திருமாங்கல்ய சரடு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்பின், வீட்டில் இருந்து கொண்டு வந்த கலவை சாதத்தை உறவினர்கள், நண்பர்களோடு சாப்பிட்டு, பறவைகளுக்கு உணவளித்து பண்டிகையை கொண்டாடுவர். பாரம்பரியமாக கொண்டாடும் பண்டிகையை இந்தாண்டும் விமரிசையாக கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னோருக்கு வழிபாடு
ஆழியாறு, அம்பராம்பாளையம், ஆனைமலை பகுதிகளில், ஆற்றங்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு படையல் வைத்தும் வழிபாடு நடத்தி மரியாதை செய்வது வழக்கமாக உள்ளது. ஆனைமலை ஸ்பெஷல்
ஆடிப்பெருக்கு பண்டிகையில், கிராமங்கள் சூழ்ந்த ஆனைமலை பகுதியில், பப்பட்டான் குழல் விளையாட்டு இன்னும் பழமை மாறாமல் உள்ளது. பப்பட்டான் குழலில், காய்களை வைத்து, அடித்து விளையாடுவது சிறுவர்களை கவர்ந்து இழுக்க கூடிய விளையாட்டாக உள்ளது.இதற்காக, உற்பத்தியாளர்கள் சில மாதங்களாக பப்பட்டான் குழல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.தேங்காய் பறிப்பவர்கள் பயன்படுத்தி கழிக்க கூடிய மூங்கில்களை விலைக்கு வாங்கி, பப்பட்டான் குழல் தயாரித்து விற்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
குடிநீரை காய்ச்சி குடியுங்க!
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் (பொ) செந்தில்குமரன் வெளியிட்ட அறிக்கையில், 'பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, நகரில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் செந்நிறமாக வருவதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.