| ADDED : ஜூலை 04, 2024 05:34 AM
பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரில், கிழக்கு போலீசார், வெங்கடேசா காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு உரிய வகையில் பைக்கில் வந்த ஒருவரிடம் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரது உடைமைகளை பரிசோதித்ததில், போதை ஊசி மருந்து வைத்திருந்ததும், அவற்றை விற்பனைக்கு எடுத்து செல்வதும் கண்டறியப்பட்டது.இதையடுத்து, அவரிடமிருந்த, 300க்கும் மேற்பட்ட ஊசி மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்த போது, சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற சுதாகரன், 45, என்பதும், பெங்களூரில் இருந்து, போதை ஊசி மருந்துகள் வாங்கி வந்து, விற்பனை செய்வதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டுள்ள சுதாகரன் மீது, ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பல போலீஸ் ஸ்டேஷன்களில், போதை ஊசி மருந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்றனர்.