உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜை

அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜை

--நமது நிருபர் குழு-

ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மேட்டுப்பாளையம் காட்டூர் ஜெகநாதன் லே அவுட்டில், தவிட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, அம்மன் சுவாமிக்கு வளையல் அலங்காரம் செய்தனர். கோவில் அர்ச்சகர் லோகேஸ்வரன், பெண்கள், நிர்வாகிகள் ஆகியோர் நேற்று முன் தினம், இரவு,11:00 மணிக்கு அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யும் பணிகளை துவக்கினர். நேற்று காலை, 6:00 மணிக்கு, 25 ஆயிரம் வளையல்களால், சுவாமிக்கு முழுமையாக அலங்காரம் செய்து முடித்தனர். பின்பு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை கோவிலில் நடைபெறும், விளக்கு பூஜையில், பெண்களுக்கு அம்மன் சுவாமிக்கு படைத்த, அலங்காரம் செய்த வளையல்கள் வழங்கப்படும் என அர்ச்சகர் தெரிவித்தார்.

சுமங்கலி பூஜை

மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் புதூர் குறிஞ்சி நகரில் குறிஞ்சீஸ்வரர், குறிஞ்சி நாயகி அம்மன் கோவில் உள்ளது. ஆடி வெள்ளியை முன்னிட்டு, இக்கோவிலில் யாகம் வளர்த்து சுமங்கலி பூஜை நடைபெற்றது. பின்பு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சூலுார்

ஆடி மாத நான்காவது வெள்ளிக் கிழமையான நேற்று சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.சூலூர் மேற்கு அங்காளம்மன், ராமாச்சியம் பாளையம் மாகாளியம்மன், செங்கத்துறை மாகாளியம்மன், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன், பொன்னாண்டாம்பாளையம் அங்காளம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ராமாச்சியம் பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பக்தி பாடல்களை பாடி, அம்மனை வழிபட்டனர. மாலை நடந்த அலங்கார பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

அன்னுார்

அன்னுாரில் பிரசித்தி பெற்ற, பிள்ளையப்பம் பாளையம், செல்வநாயகி அம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, நேற்று அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. ஊஞ்சல் உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னத்தூர், மாகாளியம்மன் கோவிலில், நேற்று மதியம் சிறப்பு வழிபாடு நடந்தது.அம்மனுக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னூர் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு, 1008 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவச் செல்வி அம்மன் சன்னதியில் அலங்கார பூஜை நடந்தது.பழமையான அன்னூர் பெரிய அம்மன் சின்ன அம்மன் கோவில்களில் நேற்று மதியம் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் வட்டாரத்தில், கஞ்சப்பள்ளி, பொகலூர், பசூர், கணேசபுரம், குருக்கம்பாளையம் உள்ளிட்ட ஊர்களில், அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ