பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில், யானைகள் நடமாட்டம் இருப்பதால், வாகனங்களில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டுமென, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி அருகே, ஆழியாறில் இருந்து வால்பாறை வரையிலான சாலை, வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியின் நடுவே இப்பாதை நீள்கிறது.ஆங்காங்கே, சிற்றாறுகள், அருவிகள் உள்ளதால், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிகளவிலான யானைகள் சாலையை கடந்து, வனப்பகுதிக்குள் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றன.குறிப்பாக, ஊமாண்டி முடக்கு பகுதியில், சோலைக்குறுக்கு வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உலா வருகிறது. அவ்வபோது, இரவு நேரத்தில், நீண்ட நேரம் சாலையில் நின்று செல்கிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள், கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:பொதுவாக, யானைகள் கூட்டமாக காணப்படும். அவைகள், உணவு, தண்ணீர் மற்றும் நிழலைத் தேடி, யானைகள், 500 ச.கி.மீ., பரப்பில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயரும்.தற்போது, வனப்பகுதி செழுமையடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக, வால்பாறை மலைப்பாதை ஒட்டிய வனப்பகுதிகளில், யானைகளின் நடமாட்டத்தை காண முடிகிறது. பெரும்பாலும், யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாவிடில் அவைகள் கடந்து சென்று விடும்.இருப்பினும், சுற்றுலா பயணியர் பாதுகாப்பு கருதி, இரவு, பகலாக யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. அறிவுறுத்தலை மீறி, வாகனங்களை நிறுத்தி யானைகளை ரசிக்கவும், போட்டோ எடுக்கவும் முற்படக் கூடாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.