கோவை;வாரந்தோறும் திங்கட் கிழமை, கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். அனைத்து அரசு துறை உயரதிகாரிகளும் பங்கேற்பர்.பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். லோக்சபா தேர்தல் காரணமாக, மார்ச் மாதம் முதல் அக்கூட்டம் நடத்தப்படவில்லை.தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து, நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றதை அடுத்து, வழக்கமான அரசு துறை பணிகள் துவங்கியுள்ளன.இதன்படி, பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார், டி.ஆர்.ஓ., ஷர்மிளா ஆகியோர் மனுக்களை பெற்றனர்.இலவச வீடு கேட்டு, 55, வீட்டு மனை கேட்டு, 90, வேலை கேட்டு, 9, இதர சேவைகளுக்கு, 201 என, 353 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க, துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.இயற்கை மரணம் அடைந்த, மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகையாக மாற்றுத்திறனாளி நல வாரியம் மூலம் ரூ.17 ஆயிரம் வீதம், 31 பாதுகாவலர்களுக்கு, மொத்தம் ரூ.5.24 லட்சத்தை கலெக்டர் வழங்கினார்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று, தேர்ச்சி பெற்று, கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளரான சிவரஞ்சனி, ஊரக வளர்ச்சித்துறை உதவியாளரான கார்த்திகா, மருத்துவத்துறை உதவியாளர்களான சந்தியா, ஹரிஹரன் ஆகியோருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.