| ADDED : ஜூலை 30, 2024 02:07 AM
ஆனைமலை;'ஆனைமலை பகுதி விவசாயிகள், புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் நாளை, 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்,' என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆனைமலை வேளாண் துறை உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை வருமாறு:காரீப் பருவம் துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் உண்டாகும் மகசூல் இழப்பில் இருந்து, தங்களை பாதுகாத்துக்கொள்ள புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.ஆனைமலை பகுதியில், காரீப் பருவ நெல் பயிரிருக்கு காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம். பயீர் காப்பீடு செய்ய ஆதார் அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலியின் பயிர் சாகுபடி அடங்கல் மற்றும் சிட்டா நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு, இ - சேவை மையம் வாயிலாக பயிர் காப்பீடு செய்யலாம் அல்லது வட்டார வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். பிரீமிய தொகை
நெல்லுக்கான காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு, 18,200 ரூபாயாகும். இதற்கு, செலுத்த வேண்டிய பிரீமியம், 764 ரூபாயாகும். மேலும் விபரங்களுக்கு வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.பதிவு செய்து பிரீமியம் செலுத்த 31ம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.