உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தபால் ஓட்டு பெற செல்லாத தேர்தல் பிரிவினர் உரிமைக்கு போராடும் 85 வயது முதியவர்

தபால் ஓட்டு பெற செல்லாத தேர்தல் பிரிவினர் உரிமைக்கு போராடும் 85 வயது முதியவர்

கோவை;கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த, 85 வயது முதியவர் ஒருவர், '12டி' படிவம் வழங்கியும் தபால் ஓட்டுப்பதிவு செய்ய, தேர்தல் பிரிவினர் வராததால், தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பி, உரிமைக்காக போராடுகிறார். எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்காததால், அக்குடும்பத்தினர் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, 19ல் நடைபெறுகிறது. 100 சதவீத ஓட்டுப்பதிவை எதிர்நோக்கி, தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஓட்டுச்சாவடிக்கு வருவதற்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக, அவர்களது வீட்டுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று, தபால் ஓட்டு பதிவு செய்தனர். இம்முகாம், 5, 6 மற்றும், 9ம் தேதி என, மூன்று நாட்கள் நடந்தது.கோவை தெற்கு தொகுதியை சேர்ந்த, பாரதி பார்க் கிராஸ் 5வது வீதியை சேர்ந்த, 85 வயதான சுப்புசாமி என்பவரிடம், அப்பகுதிக்கான தேர்தல் பிரிவு அலுவலர், தபால் ஓட்டுக்கான, '12டி' படிவம் பெற்றிருக்கிறார். ஆனால், அவரது வாக்காளர் அடையாள அட்டையில், வயது, 84 என தவறாக இருந்திருக்கிறது. இதை ஆய்வு செய்த தேர்தல் பிரிவு அலுவலர், இவ்விவரத்தை வாக்காளரிடம் தெரிவிக்காமல், '12டி' படிவத்தை நிராகரித்து விட்டார்.சுப்புசாமி, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். 1938ம் ஆண்டு, ஜூன் 13ல் பிறந்தவர். தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி, 2024, ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக வைத்து கணக்கிட்டால், 85 வயது, ஐந்து மாதங்கள், 12 நாட்களாகிறது.வரும் ஜூன் மாதம், 86வது வயதாகி விடும். பிறந்த தேதி, அவரது பென்ஷன் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், வாக்காளர் பட்டியலில், 84 வயது என தவறாக இருப்பதால், தபால் ஓட்டு பெறுவதற்கு, அலுவலர்கள் அவரது வீட்டுக்கு செல்லவில்லை. அதனால், வாக்காளர் சுப்புசாமியின் மகன் ரவி, கடந்த, 7ம் தேதியே, தேர்தல் ஆணைய எண்: 1950க்கு, தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அதற்கு, ஆணையத்தின் செயலியில் புகார் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளனர். வயது சான்றுக்கு ஆதாரமாக, பென்ஷன் புத்தக நகல் இணைத்து, புகார் அனுப்பினார். தேர்தல் பிரிவில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றனர். ஆனால், கடைசி நாளான நேற்றும், தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டு பதிவு செய்வதற்கு செல்லவில்லை.மேல்நடவடிக்கை எடுக்காமலேயே ஆணையத்தின் செயலியில், புகாருக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக, பதிவு செய்யப்பட்டு இருந்தது, அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இதுகுறித்து, கோவை தெற்கு தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபியிடம் கேட்டதற்கு, ''எங்களது பட்டியல் அடிப்படையில், வாக்காளர் சுப்புசாமி வயது, 84 என இருப்பதால், அவரது, '12டி' படிவம் ஏற்கப்படாமல் இருந்திருக்கும். தபால் ஓட்டு பட்டியலில் அவரது பெயர் வரவில்லை; அந்நடைமுறை முடிந்து விட்டது. '12டி' படிவம் கொடுத்தவர்களிடம், யார் யாரிடம் தபால் ஓட்டு பெற வேண்டுமென்கிற பட்டியல் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டு விட்டது.பரிசீலனை காலம் முடிந்து, வாக்காளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். இனி, ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிக்க தேவையான வசதி செய்து கொடுக்கலாம்,'' என்றார்.இப்படி இருந்தால், எப்படி நுாறு சதவீத வாக்களிப்பு இலக்கை எட்டுவதாம்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி