கோவை;கோவை, குஜராத்தி சமாஜ் வளாகத்தில், பா.ஜ., தன்னார்வலர்கள் கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ., மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பேசியதாவது:தே.ஜ., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. 400 எம்.பி.,க்கள் என்பதுதான் நமது இலக்கு. தமிழகத்தில் கூடுதல் எம்.பி.,க்கள் வெற்றி பெற்றால்தான் இது சாத்தியமாகும்.நமது தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும், தினமும் 6 புதிய வாக்காளர்கள் என்ற அடிப்படையில், 100 புதிய வாக்காளர்களை ஓட்டளிக்கச் செய்ய வேண்டும். படித்தவர்கள், ஓட்டுப்பதிவு நாளன்று வேறு பணிகளுக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பினரிடமும் பேசி, ஓட்டுப்போட வரவழைக்க வேண்டும். ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.மக்கள் நம்பிக்கையிழந்து விட்டால் ஜனநாயகம் தோற்றுவிடும். நல்லவர்கள் ஓட்டளிக்க வராவிட்டால், தவறானவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவர். எனவே, ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதே, நமது இலக்காக இருக்க வேண்டும்.இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.ஜுவல்லரி சங்கத்தினர், கேரள சங்கத்தினர், வழக்கறிஞர் சங்கத்தினர், வங்காளிகள் சங்கத்தினர், லகு உத்யோக் பாரதி மற்றும்ஜெய் ஹோ ரிபப்ளிக் அமைப்பினர், பா.ஜ.,வுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.முன்னதாக, அண்ணா மலைக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
பிராமணர் சங்கம் ஆதரவு
இக்கூட்டத்தில், அகில பாரத பிராமணர் சங்கம் சார்பில், பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலைக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவதாக, சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சங்க பொதுச்செயலாளர் ராமசுந்தரம், மாவட்ட தலைவர் வெங்கட்ரமணி, மகளிர் அணி செயலர் கல்யாணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.