கோவையில் அமைகிறது பயங்கரவாத தடுப்பு பிரிவு
கோவை;பயங்கரவாத தடுப்பு பிரிவு, போலீஸ் படை அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.கோவையை மையமாக கொண்ட பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, எஸ்.பி., பத்ரிநாராயணன் பொறுப்பு ஏற்றுள்ளார். இவரது தலைமையில் ஒரு துணை சூப்பிரண்டு, 3 இன்ஸ்பெக்டர் உட்பட, 40 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.இந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகம், கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இயங்கி வருகிறது. பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட வன அதிகாரியின் (டி.எப்.ஓ.,) குடியிருப்புக்கு எதிரே அமைந்துள்ள காலி நிலத்தில், சில ஏக்கர் நிலம் ஒதுக்க, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நகரின் எந்த இடத்திற்கும், சரியான நேரத்தில் சென்றடைய நகரின் மைய பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்பட வேண்டும். எனவே ரேஸ்கோர்ஸ் பகுதியில் இடம் கேட்டுள்ளோம். கோவையில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விரைவில், 50 போலீசார் கூடுதலாக வர உள்ளனர்.சென்னையில் உள்ள கமாண்டோ பள்ளியைச் சேர்ந்த, இளம் போலீசார் இந்த குழுவில் இணைக்கப்படுவார்கள். நகரம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள உளவுத்துறை தகவல்களை சேகரிக்க, ஒரு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்படும்.புலனாய்வுக் குழு, நாட்டில் உள்ள மற்ற பயங்கரவாத தடுப்பு பிரிவுகளுடன் தொடர்பில் இருக்கும். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் பகுதிகளை இந்த பிரிவு கண்காணிக்கும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.