கோவை;திருட்டு நகைகளை மண்ணில் புதைத்து வைத்து, போலீசில் சிக்கிய போது கவரிங் நகையை கொடுத்து தப்ப முயற்சி செய்த திருடனை, போலீசார் கைது செய்தனர்.கோவை ராஜ வீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் விஷ்ணு, 47. மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றபோது, அவரது தந்தை ரவீந்திரநாத், கடை வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், 'தங்க நெக்லஸ் புதிய மாடல்களை காட்டுங்கள்' என கேட்டார்.ரவீந்திரநாத் ஒவ்வொரு மாடலாக காண்பித்தார். அவரின் கவனத்தை திசை திருப்பிய அந்த வாலிபர், அங்கிருந்த நெக்லஸை நைசாக திருடினார். பின் மற்றொரு நாள் வந்து, நகையை வாங்கிக் கொள்வதாக கூறிச்சென்றார்.அவர் சென்ற பின், நகை இருப்பை ஆய்வு செய்தபோது, நெக்லஸ் மாயமாகி இருந்தது. கடைக்கு திரும்பிய விஷ்ணுவிடம், ரவீந்திரநாத் விவரத்தை கூறினார். அவர் சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் வாயிலாக, திருட்டை உறுதி செய்தார். பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார். மற்றொரு கடையில்...
இதேபோல, காந்திபுரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், 2 பவுன், 4 கிராம் செயினை வாடிக்கையாளர் போல வந்து, ஒருவர் திருடி சென்றதாக காட்டூர் போலீசில் நகைக்கடை மேலாளர் புகார் அளித்து இருந்தார்.இதையடுத்து, கொள்ளையனை பிடிக்க தெற்கு துணை கமிஷனர் சரவணக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சாதாரண உடையில் தேடி வந்தனர்.அப்போது நகை கடைகளில் ஆபரணங்களை திருடியது, சத்தியமங்கலத்தை சேர்ந்த குழந்தைவேலு, 38, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 12 பவுன், 4 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நகைக்கடை சி.சி.டி.வி., காட்சிகளை, நகைக்கடை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்தோம். குழந்தைவேலு வந்தால் தெரிவிக்க கூறியிருந்தோம். அவரின் உருவ படத்தை வைத்து, பல்வேறு இடங்களில் தேடி வந்தோம். அப்போது அவர் சரவணம்பட்டி காபி கடை பஸ் ஸ்டாப் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் இருப்பது தெரிந்து, மடக்கி பிடித்தோம். திருடிய நகையை திருப்பித் தந்துவிடுவதாகவும், தன்னை விட்டு விடும்படியும் கூறி நெக்லஸை தந்தார். நகையை கண்ட உரிமையாளர், அது கவரிங் நகை என தெரிவித்தார். குழந்தைவேலை சரவணம்பட்டியில் உள்ள அவரது வீட்டு அழைத்துச் சென்று, குடும்பத்தினரிடம் கேட்டோம்.அப்போது அவரது சித்தி, குழந்தைவேலு சில நாட்களுக்கு முன் இரவு, வீட்டின் பின்னால் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றதாக தெரிவித்தார். அங்கு மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த, 12 பவுன், 4 கிராம் தங்கத்தை மீட்டோம். குழந்தைவேலுவிடம் கேட்டதற்கு, 'எப்படியும் பிடித்து விடுவீர்கள் என தெரியும். அதனால் கவரிங் நகையை கொடுத்து சிறைக்கு சென்று வந்த பின், புதைத்து வைத்த நகையை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தேன்' என்றார். அவர் இரு கடைகளில் திருடிய நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.போலீசார் குழந்தைவேலுவை சிறையில் அடைத்தனர். கொள்ளையனை, 48 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினரை, போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.
பேசிய நகைத்திருடன்
டாஸ்மாக் மதுக்கடையில் இருந்த குழந்தைவேலுவை, போலீசார் சாதாரண உடையில் சென்று பிடித்தனர். அப்போது அவர், தான் கட்டட கான்டிராக்டர் என்றும், திருட்டுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சரளமாக ஆங்கிலத்தில் பேசி உள்ளார். அதனால் சில நிமிடங்கள், போலீசாருக்கே குழந்தைவேலு தான் திருடனா என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது. பின் அங்கேயே உறுதிப்படுத்தி, குழந்தைவேலுவை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.