இனி நான் சாப்பிட்டு என்ன பண்ண போறேன்... புள்ளைகளுக்கு கொடு. வளர்ற புள்ளைக நல்லா சாப்பிடட்டும்' - இந்த டயலாக்கை பாட்டி, தாத்தாக்கள் இருக்கும் வீடுகளில் அதிகமாக கேட்கலாம். சிக்கன் மட்டனாக இருந்தாலும் சரி, பழங்கள், காய்கறியாக இருந்தாலும் சரி; குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு பரிமாறிவிட்டு, பழையதையும், இருப்பதையும் உண்டு காலத்தை நகர்த்தி விடுகின்றனர் நம் வீட்டு பெரியவர்கள். உண்மையில், இவர்கள்தான் அதிக சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். மலச்சிக்கல் போன்ற பிரச்னையால் இவர்கள் தவிப்பது, தவறான உணவு பழக்கத்தால்தான் என்றும் கூறுகின்றனர்.இதுகுறித்து, கோவை ஆரிய வைத்திய சிகிச்சாலயா உதவி தலைமை மருத்துவ அலுவலர் விஜய பிரியா கூறியதாவது: முதுமை பருவத்தில் இயல்பாகவே, குடல் சுருங்கி அதன் தன்மை மாறிவிடுகிறது. குடலில் வறட்சி அதிகளவில் இருக்கும். உடலில், 50 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் சத்து இருக்க வேண்டும். கட்டாயம் அதிக தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு உண்ண வேண்டும். ஆனால், வயதானவர்கள் சத்தான உணவு எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை. உணவு எடுத்துக்கொள்வதிலும், தண்ணீர் பருகுவதிலும் கவனம் வேண்டும். மலச்சிக்கல் இருந்தால், வாயுத்தொல்லை, வாயு காரணமாக முதுகு வலி, போன்ற பிற பாதிப்புகள் ஏற்படும். இதனால், திரிபலா போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். சீசன் மாறும் போது உணவு முறை மாறுவதால், மலச்சிக்கல் அனைவருக்கும் வந்து தானாக சரியாகிவிடும். வயதானவர்களுக்கு இப்பிரச்னை அதிகம் இருக்கும். பத்து நாட்களுக்கு மேல் இப்பாதிப்பு இருந்தால் மட்டும், திரிபலா போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட வயதுக்கு மேல், கார்போஹைட்ரேட் உணவு குறைத்துக்கொண்டு நார்ச்சத்து, வைட்டமின் அதிகம் உள்ள உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறி அதிகம் எடுத்துக்கொள்வது அவசியம். செரிமானம் அதிகம் தேவைப்படும் உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது .இவ்வாறு, அவர் கூறினார்.
அடிக்கடி மலச்சிக்கலா?
அடிவயிற்றில் வலி மற்றும் தசைப்பிடிப்பு, வயிறு வீங்கியது போன்ற உணர்வு, குமட்டல் மற்றும் பசியின்மை, லம் கழிப்பதில் சிரமம், வழக்கத்தை விட குறைவாக மலம் கழித்தல், கட்டியான, உலர்ந்த அல்லது கடினமான மலம் வெளியேறுவது மலச்சிக்கலின் அறிகுறிகள்.இந்த அறிகுறிகள் தொடர்ந்து, பத்து நாட்களுக்கு மேல் அடிக்கடி ஏற்படும் பட்சத்தில், உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தண்ணீர் அதிகம் பருகுதல், சத்தான உணவுகளை உட்கொள்ளுதல், நடை பயிற்சி போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள்.