| ADDED : மே 28, 2024 10:42 PM
சூலுார்;பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இடுவதால், பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து கிடைத்து, மகசூல் அதிகரிக்கும். சூலுார் வட்டார வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: பயிர்கள் செழித்து வளர, தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முக்கியம். தழைச்சத்துக்கு அடுத்து, மணிச்சத்து அவசியம். பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இடுவதன் மூலம் பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து எளிதில் கிடைக்கும். மகசூலும் அதிகரிக்கும். தாவரங்களின் திசுக்கள், வேர்கள் செழித்து வளரவும், பயிர்களின் இனப்பெருக்கத்துக்கும், தரமான தானிய மகசூலுக்கும், தழைச்சத்தை ஈர்க்கும் பணிக்கும் மணிச்சத்து இன்றியமையாதது.பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிரானது, மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிசத்தினை அங்கக அமில திரவங்களை சுரந்து கரைய வைத்து பயிருக்கு எளிதாக கிடைக்க வழிவகை செய்கிறது. எல்லா பயிர்களிலும், 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும். அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் போன்ற தழைச்சத்து அளிக்கும் உயிர் உரங்களுடன் பாஸ்போ பாக்டீரியாவை கலந்து இட்டால், தழைச்சத்து ஈர்க்கும் பணியில் பயிர்களுக்கு உதவி புரிகின்றன. இதனால், உரச்செலவு, குறைவதுடன் மகசூலும் அதிகரிக்கிறது. சூலூர் வட்டாரத்தில் கார, அமில நிலை அதிகம் உள்ளதால், ரசாயன உரங்களை குறைத்து இந்த உயிர் உரங்களை பயன்படுத்தலாம். உயிர் உரங்கள், 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.