கோவை:மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், வி.கே.கே. மேனன் ரோடு, காந்திபுரம் ஹவுசிங் யூனிட், அன்னபூர்ணா லே அவுட், காமராஜபுரம் ஆகிய நான்கு இடங்களில், அங்கன்வாடி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதற்கான பூமி பூஜையை, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கோவை லோக்சபா தேர்தலில், அதிக ஓட்டுகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர். அண்ணாமலை மிகப்பெரிய எழுச்சியைக் கொடுத்துள்ளார்.வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் மக்களுக்கு பணி செய்வதே அரசியல். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், பட்டியலினத்தவர்களுக்காக எப்படி உழைத்தாரோ, அதை விட பல மடங்கு, வரும் 5 ஆண்டுகளில் உழைப்பார்.தமிழகத்தில் அதிக அங்கன்வாடிகளை கொண்டுள்ள தொகுதியாக, கோவை தெற்கு தொகுதி மாறி வருகிறது. வரும் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை விரைவுபடுத்தியுள்ளோம். 2026ல் ஆட்சியைப் பிடிப்போம் என, தி.மு.க., கூட்டணியினர் கனவு காண்கின்றனர்.குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான பிரச்னைக்கு, மத்திய அரசு மட்டுமே தீர்வு தர முடியாது. மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என, மக்களைப் பிழிகிறது மாநில அரசு.மோடி தமிழகம் வரும்போதெல்லாம், கோடிக்கணக்கான ரூபாய் திட்டங்களோடு வருகிறார். பா.ஜ., எப்போதும் தமிழக நலனில், அக்கறையோடு செயல்படுகிறது.மக்களால் விரும்பக்கூடிய கட்சியாக, பா.ஜ., மாறிக் கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், வெற்றி பெறுவதற்காக உழைப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.