கோவை:பொது இடங்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவது என, வணிக நோக்கத்துக்காக மாநகரின் அழகையே கெடுப்பதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.கோவை மாநகரில் சமீபகாலமாக, போஸ்டர் கலாசாரம் தலைதுாக்கி வருகிறது. அரசுப் பள்ளிகள், கல்லுாரிகளின் காம்பவுண்ட் சுவர்கள், மேம்பாலங்கள் உள்ளிட்ட இடங்களில், அலங்கோலமான போஸ்டர்கள் காணப்படுகின்றன.பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை பாயும் என மாநகராட்சி நிர்வாகம், போலீசார் எச்சரித்தும், விதிமீறல் தொடர்கிறது. இதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம், அவிநாசி ரோடு மேம்பாலம், காந்திபுரம் மேம்பால துாண்களில், ஓவியங்கள் வரைந்துள்ளது.இந்நிலையில், வணிக நோக்கத்தோடு மாநகரின் அழகை கெடுக்கும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், புகார் அளித்துள்ளனர்.ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின், கோவை மாவட்ட பிரிவு செயலாளர் வேலு அளித்துள்ள புகார் மனுவில், 'கே.ஜி. மருத்துவமனை ரோடு, திருச்சி ரோடு, காமராஜர் ரோடு, அவிநாசி ரோடு, நஞ்சப்பா ரோடு மற்றும் மாநகரின் முக்கிய இடங்களில், வணிக நோக்கத்தில் விளம்பர போஸ்டர்கள், விளம்பர பலகைகள் வைப்பதுடன், சுவரில் வாசகங்களும் எழுதுகின்றனர். பொது சொத்தை சேதப்படுத்துவதுடன், மாநகரின் அழகையும் கெடுக்கின்றனர். இதற்கு காரணமான நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.