பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து செவிலியர் கல்லுாரி மாணவியர், நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, அபிராமி செவிலியர் கல்லுாரி மாணவியர் வாயிலாக, கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தாய்ப்பால் வாயிலாக தாய்க்கும், சேய்க்கும் கிடைக்கும் நன்மைகள்; தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்து நாடகம் வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார். குழந்தைகள் நல பிரிவு தலைமை டாக்டர் செல்வராஜ் நன்றி கூறினார்.பிரசவ பகுதி டாக்டர்கள் வித்யா நந்தினி, கோமதி, குழந்தைகள் நலப் பிரிவு டாக்டர்கள் அமுதா, சிவசங்கர், கார்த்திகை மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள் தனலட்சுமி, கவுரி பங்கேற்றனர்.* அரசு மருத்துவமனை, கோவை அபிராமி செவிலியர் கல்லுாரி மற்றும் கிணத்துக்கடவு ஏனாம் செவிலியர் கல்லுாரி மாணவியர் சார்பில், நேற்று தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு பேரணி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் துவங்கியது.பேரணியை, சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்து, டாக்டர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சப் - கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது.அதன்பின், மருத்துவமனை கண்காணிப்பாளர், குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் ஆகியோர், செவிலியர் கல்லுாரி மாணவியருக்கு, தாய்ப்பால் சிறப்பு மற்றும் தாய்மார்கள் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது குறித்தும், குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்த சத்தான உணவாகும், என, விளக்கம் அளித்தனர். உடுமலை
அமராவதி செக்போஸ்ட் பகுதி அங்கன்வாடி மையத்தில், தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் தீபா தலைமை வகித்தார்.தாய்ப்பால் வார உறுதிமொழி, கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு தாய்ப்பால் அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சி, தாய்ப்பால் அவசியம் குறித்த கையெழுத்து பிரசாரம் மற்றும் தாய்மார்களுக்கான 'செல்பி பாய்ன்ட்' உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.* எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன், குழந்தைகள் தொண்டு அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருட்களை வழங்கினர்.அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்தியப்ரியா ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். விழாவில், 40க்கும் மேற்பட்ட பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.* வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், உடுமலை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் இணைந்து, தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். உடுமலை தளிரோட்டில் துவங்கி, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நிறைவு செய்தனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.- நிருபர் குழு -