கோவை;'இனி நம்மல்லாம் எங்க தங்கம் வாங்க போறோம்' என சலித்துக்கொண்ட பெண்களுக்கு, தித்திக்கும் செய்தியாக வந்துள்ளது நகை விலை குறைப்பு தகவல்.மத்திய பட்ஜெட் அறிவிப்பில், தங்க நகை தயாரிப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையைான இறக்குமதி வரி குறைப்பு அறிவிப்பு, நகை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி, நுகர்வோருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் முத்துவெங்கட்ராமன் கூறுகையில், ''மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கம் இறக்குமதி வரி குறைத்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. பல ஆண்டுகளாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போது வரி குறைப்பால், ரூ.4,000 வரை தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று சவரனுக்கு, 2200 வரை விலை குறைந்து விற்பனையானது. இந்த அறிவிப்பால், தங்கம் நுகர்வு அதிகரிக்கும்,'' என்றார். 'முதலீடு செய்ய சரியான தருணம்' தங்கத்தில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்துவிட்டது. பெண்கள் என்றாலே, ஆபரணங்கள் என்பதை தாண்டி, தங்கத்தை தனக்கான முதலீடாக பார்ப்பார்கள். தற்போது, வரி குறைப்பால், தங்கம் விலையும் குறைவது, அனைத்து தரப்பு பெண்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான தருணமாக பார்க்கிறேன். - தன்ய ஸ்ரீ ஆர்.எஸ்.புரம்'மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது'தங்கம் வாங்குவதே இனி கனவு தான் என்றும் எண்ணும் அளவிற்கு, விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்தது. தற்போது, கணிசமாக குறையும் என்ற அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இந்த அறிவிப்பு எதிர்பாராமல், கடந்த வாரங்களில் நகை வாங்கியவர்களை நினைத்தால் சற்று வருத்தமாகத்தான் உள்ளது. - மிதிலா ராய் ராமநாதபுரம்'பட்ஜெட்டால் மகிழ்ச்சி'பட்ஜெட் அறிவிப்பில், பெண்களுக்கு என மகிழ்ச்சி தரும் அறிவிப்பு இதுதான். நீண்ட நாட்களுக்கு பிறகு பெரிய அளவில் தங்கள் விலை குறைந்துள்ளது. மேலும் குறையும் என கூறியுள்ளார்கள். மிகவும் மகிழ்ச்சி. திருமணத்துக்கு காத்திருக்கும் பெண்கள், முதலீடாக தங்கம் வாங்குபவர்களுக்கு இது மிக நல்ல தகவல்.- நித்யஸ்ரீ ரத்தினபுரி'ஆறுதலான விஷயம்'முன்பெல்லாம், ஒவ்வொரு ஆண்டும் போனஸ் கிடைக்கும் போதெல்லாம், நகை வாங்கி வைக்கும் பழக்கம் பலருக்கு இருந்தது. ஆனால், விலையேறியதால் பலருக்கு தங்கம் வாங்கும் திறன் குறைந்தது. இந்த அறிவிப்பால், நடுத்தர மக்கள் அனைவரும் எளிதாக தங்கம் வாங்குவார்கள் என கூற இயலாது. ஆனால், விலை குறைவது ஆறுதலான விஷயம். - இந்துஜா நஞ்சுண்டாபுரம்