உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பகலில் எரியுது; இரவில் ஒளிராததால் இருளாகிறது! தெருவிளக்கு பராமரிப்பில் அக்கறையில்லை

பகலில் எரியுது; இரவில் ஒளிராததால் இருளாகிறது! தெருவிளக்கு பராமரிப்பில் அக்கறையில்லை

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி நகரில் தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது,' என, நகராட்சி கவுன்சிலர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. புதியதாக பொருத்தப்படும் தெருவிளக்குகளும் ஒரு சில நாட்கள் மட்டுமே எரிவதாக புகார் கூறப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொதுமக்களின் கோரிக்கை, நேற்று நகராட்சி கூட்டத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்,தெருவிளக்கு மற்றும் பாதாள சாக்கடை திட்ட பிரச்னை சம்பந்தமாக கவுன்சிலர்கள் பேசினர்.கவுன்சிலர்கள் பேசியதாவது:தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் பகலில் தெருவிளக்குகள் எரிகின்றன; இரவில் எரிவதில்லை. தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.அனைத்து வார்டுகளில் இந்த பிரச்னை குறித்து வாட்ஸ்ஆப் குழுவில் புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஒப்பந்தம் எடுத்தவர்களும் தீர்வு காண முன்வருவதில்லை. பொறுப்புக்கு வந்து, 30 மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை. இனியும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மாற மாட்டர்; தெருவிளக்கு பராமரிப்பில் அலட்சியமாக தான் இருப்பார்கள்.தலைவர்: தெருவிளக்கு பிரச்னைக்காக, தினமும் பேச வேண்டிய நிலை உள்ளது. இதற்கு எப்போது தான் தீர்வு காணப்படும். கொஞ்சமாவது வேலை செய்ய வேண்டும். இரவு, 7:00 மணிக்கு மேல் தெருவிளக்குகள் எரிகிறதா என கண்காணிக்க வேண்டும்.பணிக்கு சரியான நேரத்துக்கு வர வேண்டும். இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மாற்று நபருக்கு வழங்கப்படும்.கவுன்சிலர்கள்: கண்ணப்பன் நகர் எக்ஸ்டன்சன் பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தாததால் ரோடு போட முடியாமல் உள்ளது. பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளில் இருந்து அதிகளவு, மழைநீர் கலந்து கழிவுநீருடன் வெளியேறுகிறது. இதனால், ரோடுகள் சேதமடைவதுடன், மக்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.துணை தலைவர்: ஜோதிநகர் பகுதியில் குப்பை எடுக்க பேட்டரி வாகனங்கள் இருந்தன. அவை தற்போது எங்கே உள்ளது என தெரியவில்லை. எங்களது பகுதிக்கு பேட்டரி வாகனத்தை சரி செய்து வழங்க வேண்டும்.சாந்தி (அ.தி.மு.க.,): நகராட்சி பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக கட்டடம் கட்டப்பட்டது. டாக்டர்கள் வரவழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ