கோவை;கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், ஜி.சி.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நேற்று எண்ணப்பட்டன.மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் முன்னிலையில், தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள, 376 சர்வீஸ் ஓட்டுகளில், 150 மட்டும் பதிவாகி வந்திருந்தன.அவற்றில் இருந்த, 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்யப்பட்டது. இருப்பினும் சில ஓட்டுகளில் படிவங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படாததால், அவை செல்லத்தக்கது அல்ல என அறிவிக்கப்பட்டது.மிகச்சரியாக காலை, 7:30 மணிக்கு அனைத்து சட்டசபை தொகுதிகளின் 'ஸ்ட்ராங் ரூம்'களிலும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், 'சீல்' அகற்றப்பட்டது.கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டதையடுத்து, காலை, 8:30 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 'கன்ட்ரோல் யூனிட்'டுகளில், சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. வந்தார்கள்...சென்றார்கள்!
n அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், ஆதரவாளர்களுடன் உற்சாகமாக அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று ஓட்டு எண்ணிக்கையை பார்வையிட்டார். மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட போதிலும், முகத்தில் சோகம் இல்லை. சிரித்த முகத்துடன் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டே வெளியேறினார். பத்திரிகையாளர்களை கடந்தபோது மட்டும், தலைகுனிந்து சென்றார்.n தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமார், ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே மிகவும் பூரிப்புடன் இருந்தார். தபால் ஓட்டு எண்ணும் இடத்தில் ஆரம்பித்து, ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக சென்று, ஓட்டு எண்ணும் பணியை பார்வையிட்டார்.n தி.மு.க., முகவர்களை சந்தித்து, சுற்றுவாரியாக பதிவான ஓட்டு விபரங்களை கேட்டறிந்தார். அவரது மகன் விகாஷ், தி.மு.க., வக்கீல் அணியினருடன் ஒவ்வொரு தொகுதியாக சென்று, தந்தை பெற்ற ஓட்டு விபரங்களை குறிப்பெடுத்தார்.n பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, ஓட்டும் எண்ணும் மையத்துக்கு வருவதாக இருந்தது. முதல் சுற்றில் சிங்காநல்லுார் தொகுதியில் மட்டும், 293 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். வடக்கு தொகுதியில், 49 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.n இரண்டாவது சுற்றில் தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், கூடுதல் ஓட்டுகள் பெற்றபோதிலும், 14 ஓட்டுகள் அதிகம் பெற்று, அண்ணாமலை முன்னிலை வகித்தார்.n கோவை தெற்கு தொகுதியில் மட்டும் முதல் சுற்றில், 3,335 ஓட்டுகள், அண்ணாமலையை விட, தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு அதிகமாக விழுந்தது.n இதேபோல், இரண்டாவது சுற்றில், 2,981 ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு அதிகமாக பதிவாகியிருந்தது. சுற்றுக்கு சுற்று பின்தங்கியதால், ஓட்டு எண்ணும் மையத்துக்கு அண்ணாமலை வரவில்லை. போதிய இட வசதியில்லை
லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, சட்டசபை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, எப்போதும் ஜி.சி.டி., கல்லுாரி வளாகத்தில் தான் நடத்தப்படுவது வழக்கம். இம்முறை ஓட்டு எண்ணும் அறைகளில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை.மிகவும் குறுகலான இடத்தில், நெருக்கிக் கொண்டு, வேட்பாளர்களின் முகவர்கள் நின்றிருந்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அமர்ந்திருந்த இடத்திலும், போதிய இடம் இல்லாமல் நெருக்கமாக முகவர்கள் அமர்ந்திருந்தனர். நடந்து செல்வதற்கு கூட மிகவும் சிரமம் ஏற்பட்டது. தயாராக இருந்த மருத்துவ குழு
n அவசர சிகிச்சை அளிப்பதற்காக, தரைத்தளத்தில், மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். குளூக்கோஸ் ஏற்றுவதற்கும் படுக்கை வசதி செய்யப்பட்டு இருந்தது.n தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்காக, ஒரு தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஒரே மாதிரியான உணவு
ஓட்டு எண்ணும் ஊழியர்கள், அதிகாரிகள், போலீசார், முகவர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் காலை, மதியம் ஒரே மாதிரியான உணவு பார்சல் வழங்கப்பட்டது.
பத்திரிகையாளர்களுக்கு கெடுபிடி
பத்திரிகை நிருபர்கள், போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால், புகைப்படத்துடன் கூடிய 'அத்தாரிட்டி' கடிதம் வழங்கப்பட்டு இருந்தது. செய்தியாளர்களுடன் பி.ஆர்.ஓ., உடன் வந்தால் மட்டுமே அனுமதிப்போம் என போலீசார் கெடுபிடி செய்தனர்.சுற்று வாரியாக ஒவ்வொரு முறை செய்தி சேகரிக்க சென்றபோதும், போலீசார் தொந்தரவு செய்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. அடையாள அட்டை வைத்திருந்தால் அனுமதிக்க, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார். அவரது அறிவுறுத்தல் ஓட்டு எண்ணும் அறைகளுக்கு முன்பிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு சென்றடையாததால், ஒவ்வொரு இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.'ஸ்ட்ராங் ரூம்'களில் 'சீல்' அகற்றியபோது, பத்திரிகை போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்களை அழைத்துச் செல்லவில்லை.