| ADDED : மே 11, 2024 12:47 AM
கோவை;அட்சய திரிதியை கொண்டாட்டத்தையடுத்து, நேற்று தங்க ஆபரணக்கடைகள் மற்றும் ஜூவல்லரிகளில் சிறப்பு விற்பனை நடந்தது. திரளானோர் குடும்பத்தோடு வந்து நகைகளை தேர்வு செய்தனர்.அட்சய திருதியை நேற்று அதிகாலை 4:17 மணிக்கு,திருதியை திதியில் துவங்கி இன்று (சனிக்கிழமை) மதியம் 2:50 மணிக்கு நிறைவடைகிறது. நேற்று, தங்கம் வெள்ளி ஆபரணங்களை பலரும் தேர்வு செய்தனர்.நகை கடைகளில், கடந்த பத்து நாட்களுக்கு முன்னதாக முன்பதிவுகள் துவங்கிவிட்டன. குறைந்த பட்சம் 10 சதவீதம் முன்பணம் செலுத்தி, பிடித்த ஆபரணங்களையும், நகைகளையும் தேர்வு செய்து, ஆர்டர் கொடுத்திருந்தனர்.அட்சய திருதியையான நேற்று, ஆர்டர் கொடுத்த ஆபரணங்களை சிறப்பு பூஜை செய்து மங்கலப்பொருட்களோடு பெற்றுக்கொண்டனர்.சில ஜூவல்லரிகளில், தங்க நாணயங்களுக்கு செய்கூலி இல்லை. பல ஜூவல்லரிகளில் எடை குறைவான பல புதிய டிசைன்களில் இருந்த நகைகளை தேர்வு செய்தனர். சில கடைகளில் தங்கத்தின் எடைக்கு எடை, வெள்ளி இலவசமாக கொடுத்தனர். சிலர் கூலி சேதாரம் முழுமையாக தவிர்த்தும் விற்பனை செய்தனர். கோடை சுற்றுலா பேக்கேஜ் டிக்கெட்டுகள் சில கடைகளில் வழங்கப்பட்டன.இப்படி ஏராளமான சலுகைகளை, வழங்கியதால் பலரும் போட்டி, போட்டிக்கொண்டு ஆபரணங்களை வாங்கினர். ஏற்கனவே முன்பதிவு செய்த பலரும், நேற்று நகைகளை பெற்றுக்கொண்டனர்.தங்கநகை வியாபாரிகள் கூறுகையில், 'எதிர்பார்த்த அளவு விற்பனை இருந்தது. நாளை( இன்று) வர்த்தகம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றனர்.