உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூராட்சி தலைவரை மாற்ற வேண்டும் ! தி.மு.க.,கவுன்சிலர்கள் போராட்டம் 

பேரூராட்சி தலைவரை மாற்ற வேண்டும் ! தி.மு.க.,கவுன்சிலர்கள் போராட்டம் 

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, தி.மு.க.,வை சேர்ந்த கோட்டூர் பேரூராட்சி தலைவரை மாற்ற வேண்டும் எனக் கூறி, அந்த கட்சி கவுன்சிலர்கள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, கோட்டூர் பேரூராட்சியில், துணை தலைவர் கிருஷ்ணவேணி மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள், செயல் அலுவலர் ஜெசிமாபானுவை சந்தித்தனர். அப்போது, அனைத்து பணிகளும் முன் அனுமதி பெற்று செய்த பின், எதற்கு கூட்டம் நடத்த வேண்டும் என, காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து, 10 கவுன்சிலர்கள், தலைவரை மாற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பியபடி பேரூராட்சி அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தி.மு.க., கவுன்சிலர் அப்துல்அஜீஸ் மற்றும் கவுன்சிலர்கள் கூறியதாவது:கடந்த, நான்கு மாதங்களுக்கு முன் பேரூராட்சியில் நடந்த கூட்டத்தில், வரவு, செலவு கணக்கு வழங்கினர். அதில், 70 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து, பேரூராட்சி தலைவரிடம் கேட்டால், செயல் அலுவலரிடம் கேட்க கூறுகிறார்.செயல் அலுவலரிடம் கேட்டால், தலைவரிடம் கேட்க கூறுகிறார். நான்கு மாதங்களாகியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்பிரச்னை குறித்து மாவட்ட கலெக்டர், பேரூராட்சி உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை.முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை பேரூராட்சிகளுக்கு வழங்கியுள்ளார். ஆனால், இது போன்ற தவறுகளால், ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்ற அச்சத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.கடந்த ஜூன் மாதம் வழங்கிய கூட்ட அறிவிப்பில், ஒரு கோடி ரூபாய்க்கான பணிகளுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானம் வைக்கப்படுகிறது. பிறப்பு, இறப்பு பதிவுக்கு மட்டும் தான் பேரூராட்சியில் முன் அனுமதி வழங்கவில்லை. மற்ற பணிகள் அனைத்துக்கும் முன் அனுமதி வழங்கப்படுகிறது.எங்களது ஆலோசனைகளை கேட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தும் ஏற்கவில்லை. உயர் அதிகாரிகள் வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

எதிர்பார்ப்பு நிறைவேறாததால் எதிர்ப்பு!

பேரூராட்சியில் ஊழல் நடந்துள்ளதாக மாவட்ட கலெக்டர், அதிகாரிகளிடம் அவர்கள் புகார் கொடுத்தனர். ஒவ்வொரு கூட்டத்திலும் இவர்கள் தான் தீர்மானங்களை நிறைவேற்றி தந்தனர். அப்போது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு காட்டியிருந்தால், அந்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் நிறுத்தியிருக்கலாம்.ஆனால், அவர்களது புகாரில் எவ்வித முகாந்திரமும் இல்லை. தலைவராகிய நான் தன்னிச்சையாக செயல்பட முடியாது. சில எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அழுத்தங்கள் வந்தது; உடன்படாததால், 14 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ராமகிருஷ்ணன், தலைவர், கோட்டூர் பேரூராட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்