| ADDED : ஜூன் 21, 2024 12:21 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு வட்டாரத்தில் மிளகாய் சாகுபடியில் நோய்களை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.கிணத்துக்கடவு வட்டாரத்தில், சொக்கனூர், பொட்டையாண்டிபுறம்பு, நெ.10 முத்தூர், சூலக்கல் போன்ற பகுதிகளில் அதிக அளவிலும், மெட்டுவாவி, பனப்பட்டி போன்ற இடங்களில் குறைந்த அளவிலும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்தமாக, தற்போது வரை, 30 ஏக்கர் பரப்பில் மிளகாய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.பல இடங்களில் நடவு செய்யப்பட்ட மிளகாய் சாகுபடியில், நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.மிளகாயில், இலைப்பேன், இலைச்சிலந்தி தாக்க வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த அகத்தியை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும். இலைச்சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீரில் பெனாசாகுயின், 2 மில்லி அல்லது பென்பைராக்சிமேட் 1 மில்லி அல்லது புராபெர்க்கைட் 2.5 மில்லி கலந்து தெளிக்க வேண்டும், என, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.