உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையில் 6 பவுன் தங்கச்சங்கிலி மீட்டு தந்த துாய்மை பணியாளர்கள் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பாராட்டு

குப்பையில் 6 பவுன் தங்கச்சங்கிலி மீட்டு தந்த துாய்மை பணியாளர்கள் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பாராட்டு

கோவை:குப்பையோடு சேர்த்து வீசப்பட்ட, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 6 சரவன் தங்கச்சங்கிலியை, கோவை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், உரியவரிடம் ஒப்படைத்தனர்.கோவை மாநகராட்சி, 91வது வார்டு, கோவைப்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி, 47. கணவர் இறந்து விட, இரு மகன்களுடன் வசிக்கிறார். 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 6 சவரன் தங்கச்சங்கிலியை ஒரு கவரில் வைத்து, கட்டில் அருகே வைத்திருந்தார்.வீட்டில் இருந்தவர்கள், சுத்தம் செய்தபோது, அந்தக் காகிதக் கவரை குப்பை என நினைத்து, குப்பைத்தொட்டியில் வீசியுள்ளனர்.சிவகாமி நகையை தேடியபோது, கவரை காணவில்லை. அழுது புலம்பிய அவர், உறவினர் மூலம் தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர் உதயக்குமாருக்கு தெரிவித்தார். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கலாமா அல்லது குப்பை கிடங்கில் தேடிப்பார்க்கலாமா என ஆலோசித்தனர். எவ்விதத்திலும் துாய்மை பணியாளர்களை, கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த கவுன்சிலர் உதயகுமார், வார்டு மேற்பார்வையாளர் மணிகண்டனுக்கு, தகவல் தெரிவித்தார்.கோவைப்புதுார் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்ததும் 1.5 டன் கொள்ளளவு மக்காத குப்பையை ஓரிடத்தில் கொட்டி, துாய்மை பணியாளர்கள் ராணி, சத்யா, சாவித்ரி ஆகிய மூவரும் தேடத் துவங்கினர். காலை, 10:00 மணியில் இருந்து மாலை, 5:00 மணி வரை, குப்பையை தனித்தனியாக பிரித்து தேடினர். அப்போது காகித கவர், நகையுடன் கிடைத்தது. உடனடியாக நகை சிவகாமி வசம் ஒப்படைக்கப்பட்டது. நகை திரும்ப கிடைத்ததும், சிவகாமி ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுதார். இச்சம்பவத்தை, கவுன்சிலர் உதயக்குமார், மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தெரிவித்து, துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மன்றத்தில் இருந்த மற்ற கவுன்சிலர்கள், மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ