| ADDED : ஆக 07, 2024 11:11 PM
கோவை, - மாநில அளவில் நடந்த செஸ் போட்டியில், கோவையை சேர்ந்த மாணவன் வெற்றி பெற்றார்.மாநில அளவிலான, 36வது, 7 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டிகள் திருநெல்வேலியில் நடந்தன. பொது மற்றும் மாணவியர் என, இரு பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் இருந்து, 250 பேர் பங்கேற்றனர். இதில் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சிறுவன், இன்பா தினேஷ்பாபு பங்கேற்றார். பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டிகளில், அவர் தனது திறமையை நிரூபித்தார். இறுதியில், ஒன்பது சுற்றுகளின் முடிவில், எட்டு புள்ளிகள் பெற்று இன்பா தினேஷ்பாபு முதல் இடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற மாணவனுக்கு ரூ.6,000 ரொக்கப்பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.மாநில அளவில் முதல் இடத்தை பிடித்ததால், தேசிய அளவில் நடக்க உள்ள போட்டிகளில் பங்கேற்க தமிழக அணியில், இவர் இடம் பிடித்துள்ளார்.