உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

ஊட்டி:ஊட்டி கோர்ட்டில் மேற்கு மண்டல ஐ.ஜி., வரும் 29ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் மின்வாரியம் மூலம் கடந்த, 2016ம் ஆண்டு மின் கம்பங்கள் நடப்பட்டன. அப்போது, அங்கிருந்த வியாபாரிகள் சிலர் மின் கம்பங்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மின்வாரிய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், ஊட்டி மத்திய போலீஸ் ஸ்டேஷன் போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கு நீலகிரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.வழக்கு விசாரணைக்காக, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் விநாயகனுக்கு நீதிமன்றத்திலிருந்து பலமுறை சம்மன் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.பிடிவாரன்டை மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகம் வாயிலாக நிறைவேற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. இதுகுறித்து நீதிமன்றத்திலிருந்து நினைவூட்டுதல் கடிதம் அனுப்பப்பட்டது. சாட்சியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், இவ்வழக்கில் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை பரிந்துரைக்க கூடாது என விளக்கம் தரும்படி மேற்கு மண்டல ஐ.ஜி.,யை வரும் 29ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி தலைமை குற்றவியல் நீதிபதி செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை