புகையிலை பொருட்களை கடத்திய மூவருக்கு சிறை
சூலுார் பகுதி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக, சூலுார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, சூலுார் படகுத்துறை அருகே வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 200 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதராம் மகன் கெலாராம்,26, ஹிமா ராம் மகன் நாகராம்,24, கோவை மாவட்டம், செட்டிபாளையத்தை சேர்ந்த காளிமுத்து மகன் மணிகண்ட பூபதி,39 ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாடுகளை திருடிய மூவர் கைது
மேட்டுப்பாளையம் காரமடை சாலை, கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகன் பிரபு, 32. இவர், 10 பசு மாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 29ம் தேதி மாடுகளுக்கு தீவனம் போட்டுவிட்டு, இரவு படுத்துக்கொண்டார். காலையில் பால் கறக்க எழுந்து பார்த்தபோது, இரண்டு மாடுகளை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் பிரபு புகார் செய்தார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் ஊட்டி சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமளித்த,மூவரிடம் விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினர். மேலும் மூவரிடம் விசாரணை செய்த போது, குன்னூர் அருவங்காடு ஒசட்டியை சேர்ந்த அப்துல்லா, 32; குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஜாவித், 30, குன்னூர் கரோலினா எஸ்டேட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 58 என தெரியவந்தது. இவர்கள் மூவரும், குன்னூரில் இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த, 29ம் தேதி இவர்கள் மூவரும், மேட்டுப்பாளையம் பிரபுவின் வீட்டு கொட்டகையில் கட்டி இருந்த, இரண்டு பசு மாடுகளை திருடி வேனில் ஏற்றிச் சென்றதை ஒத்துக் கொண்டனர். இதை அடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா விற்றவர் சிக்கினார்
காரமடை அருகே குருந்தமலை அடிவார மலைப்பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதாக, காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து எஸ்.ஐ., அரவிந்தராஜன் தலைமையில், போலீசார் குருந்தமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலை அடிவாரத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரணை செய்து, அவர் வைத்திருந்த பையை பறிமுதல் செய்து பார்த்தபோது, உள்ளே இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து, துடியலூர் அண்ணா காலனியை சேர்ந்த ரங்கநாதன், 40; என்பவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா விற்ற இருவர் கைது
சூலூர் அடுத்த செங்கத்துறை நால்ரோட்டில் சூலூர் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த இருவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையில், 2 கிலோ, 200 கிராம் புகையிலை பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் திருப்பூர் மங்கலம் ரோட்டை சேர்ந்த ராஜா மகன் பிரவீன், 21, பீகார் மாநிலத்தை சேர்ந்த மெய்நேகர் மகன் அக்ஷய் குமார், 28, என்பது தெரிந்தது. அவர்கள் கஞ்சாவை சூலூர் பகுதியில் விற்று வந்தது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.