தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீஸ்
கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த குமாரசாமி, 54, நேற்று வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, பவானி ஆற்றுக்கு அருகில் உள்ள பாலத்திற்கு சென்றார். பின், பாலத்தின் மீது ஏறி, ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த மேட்டுப்பாளையம் லைப் கார்ட்ஸ் பிரிவு போலீசார், உடனே ஆற்றில் குதித்து குமாரசாமியை காப்பாற்றினர். பின், பரிசல் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர். காப்பாற்றப்பட்ட குமாரசாமியின் உறவினரை போலீசார் வரவழைத்து, குமாரசாமிக்கு அறிவுரை கூறி அவர்களுடன் அனுப்பி வைத்தனர். ---பெண் துாக்கிட்டு தற்கொலை
மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சபரிராஜ், 32. டிரைவர். இவருக்கு தாரணி, 28, என்ற மனைவியும், இரண்டரை மற்றும் ஒன்றரை வயதுகளில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.இதனிடையே கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. பின் நேற்று முன் தினம் காலை சபரிராஜ், வழக்கம் போல் பணிக்கு சென்றார். வீட்டில் தாரணி மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த தாரணி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து, தகவல் அறிந்த சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார், விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.