கோவை;மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை, பாலிசிதாரருக்கு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை அருகேயுள்ள குரும்பபாளையத்தை சேர்ந்த மகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி ரூபா ஆகியோரது பெயரில், ஸ்டார் ெஹல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 2022-23 ஆண்டிற்கு, மருத்துவ காப்பீடு செய்திருந்தார்.இந்நிலையில், 2022, ஆக., 31ல் மகேஸ்வரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், அதற்கான கட்டணம், 20,864 ரூபாய் செலுத்தினார். இத்தொகையினை திரும்ப தரக்கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பம் அளித்தார்.ஆனால், மகேஸ்வரனுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கு முன், நோய் பாதிப்பு இருந்ததை மறைத்து பாலிசி எடுத்ததாக கூறி, சிகிச்சை பெற்றதற்கான தொகை கொடுக்க மறுத்தனர். இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தங்கவேல், ''இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், புகார்தாரருக்கு மருத்துவ செலவு தொகை, 17,625 ரூபாய் திருப்பி செலுத்த வேண்டும். ''மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.