| ADDED : ஜூலை 01, 2024 01:40 AM
கோவை;விதை உற்பத்தி செய்யப்படும் பண்ணைகளை விதைச்சான்றுத் துறை ஆய்வு செய்து, தரமான சான்று விதைகள் கிடைக்க, விவசாயிகளுக்குவேளாண் பல்கலை உதவி வருகிறது.கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், இந்த ஆண்டில் 120 ஏக்கரில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இடிகரை கிராமத்தில், வேளாண் துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள சோளம் கோ --32 விதைப்பண்ணையை, விதைச்சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் பயிர் விலகு தூரம், கலவன்கள் எண்ணிக்கை பிற ரக பயிர்கள் கலப்பு மற்றும் குறித்தறிவிக்கப்பட்ட நோய் போன்ற காரணிகள் ஆய்வு செய்யப்பட்டன.சோளம் கோ-32 ரகமானது காரீப் பருவத்துக்கு ஏற்ற ரகமாகும். 110 நாட்களில் முதிர்ச்சியடையும். இதன் மகசூல் ஏக்கருக்கு 960 கிலோவும், தீவன மகசூல் ஏக்கருக்கு 2,600 கிலோ வரை கிடைக்கும். தானியமாகவும், சோளத்தட்டை கால்நடைகளுக்கான தீவனமாகவும் இரட்டிப்பு பயன் தரக்கூடியது. எனவே, சோளம் கோ-32 பயிர் செய்து அதிக மகசூல் பெறலாம் என விவசாயிகளிடம் தெரிவித்தார். ஆய்வின் போது, கோவை விதைச்சான்று அலுவலர் பிரியதர்ஷினி, உதவி விதை சான்று அலுவலர் விஜய் மற்றும் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.