மேட்டுப்பாளையம்:வடமாநிலத்தவர்கள் மீது குழந்தை கடத்த வந்தவர்கள் என சந்தேகம் கொள்ள வேண்டாம் என மக்களிடம் போலீசார் அறிவுரை கூறினர்.கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயன்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன், சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இது முற்றிலும் வதந்தி என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில், வடமாநிலத்தவர்கள் மீது சந்தேகம்படும் படியான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.கடந்த மார்ச் மாதம் சிறுமுகை அருகே பெத்திக்குட்டையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பீவின்குமார், 34, விற்பனை செய்ய துணி மூட்டையுடன் நடந்து வந்தார்.அப்பகுதியை சேர்ந்த சிலர், பீவின்குமார் குழந்தையை கடத்த வந்தவர் என கூறி அவரை பிடித்து வைத்தனர். பின் போலீசார் விசாரணையில், அவர் சாதாரண துணி வியாபாரி என தெரியவந்தது. இதையடுத்து பீவின்குமார் அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டார். அதே போல், கடந்த மே மாதம் காரமடை அருகே திம்மம்பாளையம்புதூர் பகுதியில் 22 வயது மதிக்கதக்க வடமாநிலத்தை இளைஞர் ஒருவர், அப்பகுதியில் சுற்றி திரிந்தார்.அப்போது, அங்கு வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளுடன் அந்த இளைஞரும் விளையாடினார். விளையாடிய போது குழந்தைகளை தூக்க முயன்றார்.இதையடுத்து, அவரை அப்பகுதி மக்கள் குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து, அவரை பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். பின், காரமடை போலீசார் வந்து, விசாரித்து இளைஞரை மீட்டனர்.இது தொடர்பாக காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என பல்வேறு இடங்களிலும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வடமாநிலத்தவர்களை சந்தேகிக்க வேண்டாம். சந்தேகம் ஏற்பட்டால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும்' என்றனர்.