உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரவணம்பட்டியில் 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர்! உப்பு தண்ணீரும் வராததால் பொதுமக்கள் கண்ணீர்

சரவணம்பட்டியில் 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர்! உப்பு தண்ணீரும் வராததால் பொதுமக்கள் கண்ணீர்

வேகத்தடை வேண்டும்

வடவள்ளி, லட்சுமி நகர் ஆர்ச் முன்பு உள்ள வளைவில், அதிவேகமாக வரும் வாகனங்களால், அடிக்கடி விபத்து நடக்கிறது. வேகத்தடை அமைத்து தருமாறு, பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. விபத்துகளால் உயிர்பலி ஏற்படும் முன், நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வாணி, வடவள்ளி.

1. கடும் துர்நாற்றம்

கணபதி, இரண்டாவது வீதி, எம்.கே.பி., காலனியில், பல வருடங்கள் பழமையான சாக்கடை கால்வாயின் சுற்றுச்சுவர், பல இடங்களில் இடிந்துள்ளது. இதனால், கழிவுநீர் சரிவர வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதில், கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதுடன், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.- பிரவீன், கணபதி.

ஆபத்தான நிலையில் கம்பம்

வரதராஜபுரம், 57வது வார்டு, இரண்டாவது மேற்கு வீதியில், ' எஸ்.பி 43 பி-7' என்ற எண் கொண்ட கம்பம் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. கம்பத்தின் அடிப்பகுதியில், கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டுள்ளது. கீழே விழுந்தால் உயிரிழப்பு நிகழவும் வாய்ப்புள்ளது. விரைந்து கம்பத்தை சீரமைக்க வேண்டும்.- சந்திரபிரகாஷ், வரதராஜபுரம்.

சாலையில் 'விரிசல்'

ஆத்துப்பாலம் - உக்கடம் செல்லும் வழியில், பெரியகுளம் குளக்கரை சாலை நடுவே, பல அடிக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. கார் போன்ற வாகனங்கள், தட்டுத்தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகனத்தில் வருவோர், நிலைதடுமாறி விழுகின்றனர். இரவு நேரங்களில் அதிக விபத்து நடக்கிறது.- தங்கவேல், ஆத்துப்பாலம்.

அடிக்கடி தோண்டினால் எப்படி?

காந்திபுரம், ஐந்தாவது வீதியில், லாலா ஓட்டல் எதிர்புறம், பாதாள சாக்கடை சீரமைப்பிற்காக ஒரு வாரத்திற்கு முன் குழி தோண்டப்பட்டது. பணியை முடிக்காமல், தடுப்புகளை வைத்து குழியை மறைத்துள்ளனர். வாகனங்கள் செல்ல முடியவில்லை. அடிக்கடி இதுபோல் குழியை தோண்டுவதால், குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.- சுரேஷ், காந்திபுரம்

சுகாதார சீர்கேடு

சிட்ரா, நேருநகர் ஹவுசிங் யூனிட் பகுதியில், சாலையோரம் திறந்த வெளியில் சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர். நாய்கள் உணவு கழிவுகளை இழுத்து, தெரு முழுவதும் சிதறடிக்கின்றன. இதனால், குடியிருப்பு பகுதியில் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.- நீலா, சிட்ரா.

தண்ணீரின்றி தவிப்பு

சரவணம்பட்டி, 11வது வார்டுக்குட்பட்ட அன்பு நகர், வேலன் நகர், எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், 20 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறையே, குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும், இரண்டு மணி நேரம் மட்டுமே வருகிறது. உப்பு தண்ணீரும் சீராக வருவதில்லை. போதிய தண்ணீர் கிடைக்காமல், இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.- வேலவன், சரவணம்பட்டி.

பழுதான வண்ண நீருற்று

ஆர்.எஸ்.புரம், முத்தண்ணன் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில், மாலை நேரங்களில், அருகில் வசிப்போர் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். இங்கு, வண்ண செயற்கை நீருற்று, பல மாதங்களாக செயல்படவில்லை.பழுதை சரிசெய்ய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.- பாலமுருகன், ஆர்.எஸ்.,புரம்.

இருளால் பாதுகாப்பில்லை

வடவள்ளி, லிங்கனுார், அண்ணாநகர், ஐந்தாவது வீதியில், கம்பத்தில் தெருவிளக்கு பொருத்தப்படவில்லை. இருள் காரணமாக இரவு நேரங்களில், வெளியில் செல்ல பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. விரைந்து, கம்பத்தில் விளக்கை பொருத்த வேண்டும்.- முருகானந்தம், வடவள்ளி.

வெயிலில் வாடும் பயணிகள்

சிங்காநல்லுார், காமராஜ் நகர், இ.எஸ். ஐ., மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை வசதியில்லை. கோடை காலத்தில், வெயிலில் நிற்க முடியாமல் நோயாளிகள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள், பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.- ராஜரத்தினம், சிவாநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை