உடுமலை : உடுமலை அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்குட்பட்ட, குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு பகுதிகளில், 4,686 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அணையிலிருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து, குறுகிய கால நெல் ரகங்களை, சாகுபடி செய்கின்றனர். இப்பகுதியில், போதிய உலர் கள வசதியில்லாததால், அறுவடை சீசனில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.நெல் மணிகளை இயந்திரங்கள் வாயிலாக பிரித்தெடுத்த பிறகு, குறிப்பிட்ட நாட்கள், வெயிலில் உலர வைத்தால் மட்டுமே, ஈரப்பதம் குறைந்து விற்பனைக்கு தயாராகும்.அப்பகுதி கிராமங்களில், போதிய உலர்களங்கள் இல்லாத நிலையில், ரோட்டிலும், விளைநிலங்களில் தார்ப்பாய் விரித்தும், நெல்லை காய வைக்கின்றனர். இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.சிறு, குறு விவசாயிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துக்கு, நெல் கொண்டு செல்ல வாகனச்செலவு அதிகரிப்பதால், தயக்கம் காட்டுகின்றனர். நெல் அதிகளவு சாகுபடியாகும் பகுதிகளில், உலர் களங்கள் கட்ட, மாவட்ட வேளாண் விற்பனை குழு வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.