உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை-கரூர் பசுமை வழிச்சாலை...ஆறாண்டுகளாக நகராத வேலை!

கோவை-கரூர் பசுமை வழிச்சாலை...ஆறாண்டுகளாக நகராத வேலை!

இயற்கையாகவும் தொழில்ரீதியாகவும் கோவையுடன் இணைந்திருக்கும் கரூர் நகரம், தமிழகத்தின் மிக முக்கியமான நகரங்களான மதுரையையும், திருச்சியையும் இணைக்கின்ற மையப்புள்ளியாகவும் உள்ளது. கரூருக்குச் சென்று விட்டால், அங்கிருந்து இரு நகரங்களுக்கும் இரண்டு மணி நேரத்தில் செல்வதற்கு, தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பு உள்ளது.ஆனால் கோவையிலிருந்து கரூர் செல்லும் சாலை, பெருமளவில் இரு வழிப்பாதையாக இருப்பதால், கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.இப்போதுள்ள ரோட்டை விரிவாக்கம் செய்தாலும், பல நகரங்களைக் கடந்து செல்லும் போது, பயணம் தாமதமாவதைக் கருத்தில் கொண்டே, கோவை-கரூர் பசுமை வழிச்சாலைத் திட்டம் தீட்டப்பட்டது.மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தில் (பேஸ் 1), கோவை-கரூர் இடையே ஆறு வழி பசுமைச்சாலை புதிதாக அமைக்கப்படும் என்று கடந்த 2017 ல் அறிவிக்கப்பட்டு, 2017-2018 பட்ஜெட்டிலேயே அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது.பெங்களூரைச் சேர்ந்த 'பீட்பேக் இன்ப்ரா' என்ற நிறுவனம், விரிவான திட்ட அறிக்கையை 2018 மார்ச் 13லேயே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமும் சமர்ப்பித்து விட்டது.

100 கி.மீ., ரோடு...ஒரே நேர் கோடு!

கோவை-திருச்சி ரோட்டிலுள்ள காரணம்பேட்டையிலிருந்து, கரூர் வரை 100 கி.மீ., துாரத்துக்கு ஒரே நேர்கோட்டில் அமைவதே, இந்த பசுமைச் சாலையின் தனிச்சிறப்பு.அதே ரோடு, காரணம்பேட்டையிலிருந்து மதுக்கரை வரை 38 கி.மீ., துாரத்துக்கும், பெரியநாயக்கன்பாளையம் வரை 44 கி.மீ., துாரத்துக்கும் புதிய பை-பாஸ்கள் உடன் மொத்தம் 182 கி.மீ., துாரத்துக்கு, ஆறு வழிச்சாலையாக இது அமைக்கப்படும்.இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதும், மேற்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் முனைவோர் பெரிதும் மகிழ்ந்தனர்.ஒருங்கிணைந்த இந்த பசுமை வழிச்சாலைக்கு, கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து, 2957 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டுமென்று, நில ஆர்ஜித பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.எந்த நகரையும் இது கடந்து செல்வதில்லை; பல்லடம், பொங்கலுார், அவிநாசிபாளையம், காங்கேயம், ஓலப்பாளையம், வெள்ளகோவில் ஆகிய ஊர்களுக்கு வெளியே, ஐந்து கி.மீ., துாரம் தள்ளியே ரோடு திட்டமிடப்பட்டுள்ளது; அந்தப் பகுதிகளில் கட்டடங்கள் எதுவுமில்லை; நிலம் மட்டுமே கையகப்படுத்த வேண்டியிருக்கும்.கட்டடம் இல்லாததால், நிலத்தின் வழிகாட்டி மற்றும் சந்தை மதிப்பும் அதிகமில்லை. கடந்த 2019ல், இந்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பின்படி கணக்கிடப்பட்டது.அப்போதிருந்த சந்தை மதிப்புக்கு, நான்கு மடங்கு இழப்பீடு கொடுத்தாலும் 680 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டது.

கேள்விகள் பல; பதில் ஒன்றே!

இந்த திட்டத்துக்கு, கோவை, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டங்களிலும் ஒப்புதலும் பெறப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே கொரோனா தாக்கம் காரணமாக, பணிகள் கிடப்பில் போடப்பட்டன. ஆனால் 2021க்குப் பின், இயல்பு நிலை திரும்பிய பின்னும் இந்த திட்டம் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.இத்திட்டத்தின் நிலை குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2022, 2023 ஆகிய இரு ஆண்டுகளிலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பெற்ற ஒரு பதிலில், இத்திட்டத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இன்னும் ஒப்புதல் தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பதிலில், ரூ.7500 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாராகி, நில ஆர்ஜித பிரேரணை (L.P.S.-Land Plan Shedule), ஆணையத்தின் நிலமெடுப்பு கமிட்டியின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.கடைசியாகப் பெறப்பட்ட பதிலிலும், ' திட்டத்துக்குத் தேவைப்படும் நிலம் குறித்த நில ஆர்ஜித பிரேரணை, அதற்கான கமிட்டியிடம் உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.அந்த கமிட்டி ஒப்புதல் தந்தபின், நில ஆர்ஜிதத்துக்கான தொகை செலுத்தப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், சலிக்காமல் பதிலளித்து வருகின்றனர். ஆனால் அந்த கமிட்டி ஏன் இத்தனை ஆண்டுகளாக அதைக் கிடப்பில் போட்டுள்ளது என்பதற்கு, எந்த அதிகாரியிடமிருந்தும் திட்டவட்டமான பதில் கிடைப்பதில்லை.இந்தத் திட்டத்துக்காக, ஏராளமான விவசாய நிலங்கள் எடுப்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு, பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மூன்று மாவட்ட கலெக்டர்களிடமும் மனு கொடுத்திருந்தனர். அதற்குப் பின் பெரிய எதிர்ப்பு எதுவும் எழவில்லை. இருப்பினும் திட்டம், அடுத்த கட்டடத்தை நோக்கி நகரவேயில்லை.இதே பாரத்மாலா திட்டத்தின், முதற்கட்ட அறிவிப்பில் தான் (பேஸ் 1), கர்நாடகாவில் பெங்களூரு-மைசூரு ஆகிய நகரங்களுக்கு இடையில், ரூ.7500 கோடி மதிப்பில் எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா காலத்திலேயே திட்டம் துவக்கப்பட்டு, கடந்த ஆண்டில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, 10 வழிச்சாலை முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டு விட்டது.

இங்கே துவங்கவேயில்லை!

மொத்தம் ரூ.8350 கோடி மதிப்பில், 117 கி.மீ., துாரத்துக்கு, 6 நகரங்களில் பை பாஸ், 4.22 கி.மீ., நீளமுள்ள ஒரே மேம்பாலம், 9 பெரிய பாலங்கள், 44 சிறிய பாலங்கள், 4 ரயில்வே மேம்பாலங்கள், 64 சுரங்கப்பாதைகள் உடன் இந்த திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது; இதனால் இரு நகரங்களுக்கு இடையில், முன்பு 3 மணி நேரமாக இருந்த பயணம், இப்போது 75 நிமிடங்களாகக் குறைந்துள்ளது.ஆனால், அதே முதற்கட்டத்தில் அறிவிக்கப்பட்ட கோவை-கரூர் பசுமை வழிச்சாலை விரிவான திட்ட அறிக்கைக்குக் கூட, இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்தத் திட்டம் நிறைவேறினால், கோவையிலிருந்து திருச்சி, மதுரை இரு நகரங்களுக்கும், கேரளாவிலிருந்து நீலகிரி செல்லவும் பயண நேரம் பாதியாகக் குறைவதுடன், தொழில் வளம், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இரட்டிப்பாகப் பெருகும். திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோவை திட்ட இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், ''இதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் நில ஆர்ஜித பிரேரணை ஆகியவை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளன. விரைவில் ஒப்புதல் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் கோவை எம்.பி.,மட்டுமின்றி, திருப்பூர், கரூர், திருச்சி மற்றும் மதுரை எம்.பி.,க்களும், இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்ற, வீரியமாக குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்!திட்டம் முடங்கக் காரணமென்ன...?இந்தத் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாதது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கூறுகையில், ''இந்தத் திட்டத்தை ஆளும்கட்சிக் கூட்டணியில் உள்ள கோவை எம்.பி., உள்ளிட்டவர்கள் எதிர்த்ததால் தான், நிறைவேற்ற முடியவில்லை. இதை விரைவாக நிறைவேற்ற, தேவையான முயற்சி எடுக்கப்படும்.'' என்றார்.கோவை எம்.பி.,நடராஜனிடம் கேட்டபோது, ''நான் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. பல்லடம், காங்கேயம் சுற்று வட்டாரத்தில் 2500 ஏக்கர் விவசாய பூமியை எடுத்து இந்த ரோட்டை அமைத்தாலும், தற்போதுள்ள ரோட்டை விட வெறும் 6 கி.மீ., தான் மிச்சமாகும். இதை ஆணையமே எழுத்துப்பூர்வமாகக் கொடுத்துள்ளது. புதிய ரோட்டில் சுங்கக் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.அதனால் தான் விவசாயிகள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். இப்போதுள்ள ரோடு அகலப்படுத்தப்படுகிறது; காங்கேயம், பல்லடம் நகருக்குள் இரு மேம்பாலங்கள் அமைத்து, சூலுார் நகருக்குள்ளும் ரோடு அகலப்படுத்தினால் போதும். கரூர் விவசாயிகளுக்கு இத்திட்டத்தால் பலன் கிடைக்குமென்று கருதி, அண்ணாமலை இத்திட்டத்தை ஆதரிக்கலாம்,'' என்றார்.இந்தத் திட்டம் நிறைவேறினால், கோவையிலிருந்து திருச்சி, மதுரை இரு நகரங்களுக்கும், கேரளாவிலிருந்து நீலகிரி செல்லவும் பயண நேரம் பாதியாகக் குறைவதுடன், தொழில் வளம், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இரட்டிப்பாகப் பெருகும்.

மூன்றே மணி நேரம் தான்!

இந்த பசுமை வழிச்சாலையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். இது தவிர்த்து, தற்போதுள்ள கோவை-கரூர் ரோடும் தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையால், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. பல்லடம்-திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள குறுக்கத்தி வரை, 48 கி.மீ., துாரமுள்ள ரோட்டில், ரூ.275 கோடிக்கு பணிகள் நடந்து வருகிறது.அதேபோல, திண்டுக்கல் மாவட்ட எல்லையிலிருந்து கரூர் வரையிலுமான ரோடும், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் மற்ற வாகனங்கள் சுங்கம் செலுத்தாமல் அதே ரோட்டில் பயணம் செய்யலாம். விரைவாகச் செல்ல விரும்புவோர் மட்டுமே, பசுமை வழிச்சாலையைப் பயன்படுத்தலாம். இந்த ரோட்டில், கோவையிலிருந்து திருச்சி மற்றும் மதுரைக்கு தலா மூன்று மணி நேரத்தில் போகலாம்.

மொத்தத் தேவை 2957 ஏக்கர் நிலம்!

இத்திட்டத்துக்கு கோவை மாவட்டத்தில், 67 கி.மீ., திருப்பூரில் 77 கி.மீ., கரூரில் 37 கி.மீ., துாரம் ரோடு அமைக்க 2957 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. கோவையில் 1097 ஏக்கருக்கு 96 கோடி ரூபாய், திருப்பூரில் 1252 ஏக்கருக்கு 64 கோடி ரூபாய், கரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த ஒன்பது கோடி ரூபாய் என 169 கோடி ரூபாய், நிலங்களின் மதிப்பாக கணக்கிடப்பட்டு, நான்கு மடங்கு இழப்பீடு கொடுத்தாலும், 680 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகுமென்று மதிப்பிடப்பட்டது. அதன் இன்றைய மதிப்பு, இரட்டிப்பாகியிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை