ஊட்டி:நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறையால் தடை செய்யப்பட்ட ஆபத்தான, சோலுார் தட்டனேரி பகுதிக்கு செல்வது அதிகரித்தும், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை.நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளில், இளைஞர் பட்டாளங்கள், உள்ளூரில் உள்ள சுற்றுலா மையங்களை தவிர்த்து, வனப்பகுதிகள்; ஆபத்தான மலை சிகரங்களுக்கு சென்று, சாகசங்களை செய்து, அதனை 'மொபைல்' போனில் பதிவு செய்து, சமூக வலை தளங்களில் வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த விபரீத விளையாட்டுகளால், சில நேரங்களில் உயிர்பலியும் ஏற்படுகிறது. மார்ச் மாதம் நடந்த அசம்பாவிதம்
இதனை நினைவுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச், 15ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பொறியாளர் பிரவீன்குமார்,26, மற்றும் அவரின் நண்பர்கள்,10 பேர் குன்னுார் அருகே கொலக்கம்பை வனப்பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட செங்குட்டுவராயன் மலைக்கு சென்றனர். அதிகளவில் விஷப்பூச்சிகள் உள்ள இப்பகுதியில், குளவி கூடு கலைந்ததால், பிரவீன்குமார் உட்பட மூவர் ஓடி உள்ளனர். அதில், பீரவீன்குமார் திடீரென மாயமாகினார். மலை சிகரத்தில் இருந்து, 300 அடி தாழ்வான பகுதியில் விழுந்த, அவர் உடலை மறுநாள் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனால், அவர்கள் பெற்றோர் உட்பட நண்பர் மீளா துயரத்தில் ஆழ்ந்தனர். இந்த சம்பவத்துக்கு பின், மாவட்ட நிர்வாகம்; வனத்துறையினர், மலை மாவட்டத்தில் தடை செய்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால், இன்றும் பல இடங்களிலும் தடையை மீறி செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காட்சி முனையில் அத்துமீறல்
இந்நிலையில், ஊட்டியில் உள்ள சோலுார் அருகே வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதியான தட்டனேரி மலை சிகரத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக பல இளைஞர்கள்; பெண்கள் அத்துமீறிய சென்று, மிகவும் ஆபத்தான் மலை உச்சியில் நின்று 'செல்பி' எடுப்பதையும், மேக மூட்டமாக காலநிலையில், பள்ளதாக்கு பகுதிகளுக்கு செல்வதையும் வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.அப்பகுதி மக்கள் கூறுகையில்,'தற்போது ஊட்டியில் பருவமழை தொடர்வதால், தட்டனேரி மலை சிகரப்பகுதிகளில் கடும் மேக மூட்டம் நிலவுகிறது. இங்கு செல்லும் இளைஞர்கள் சிலர், பாறைகளின் மீது அமர்ந்து மது வகைகளை குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். இதனால், இப்பகுதிக்கு வரும் யானை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், பலர் பள்ளதாக்கு பகுதிக்கு மேகமூட்டத்தில் செல்வதால், தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.