| ADDED : ஜூன் 20, 2024 05:52 AM
உடுமலை : சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி, உடுமலை பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில், மாணவர்கள் மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டனர்.பள்ளி தலைமையாசிரியர் பூரணி தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சேஷநாராயணன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம்வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ஒவ்வொரு மாணவரின் பெயர் வைக்கப்பட்டு, அந்த மரங்களை மாணவர்கள் பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. நிகழ்வில், மாணவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர்.சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் மாலதி விழாவை ஒருங்கிணைத்தார். உதவி தலைமையாசிரியர் குமரேசன் நன்றி தெரிவித்தார்.* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை, நாட்டுநலப்பணி திட்டம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வார விழா கொண்டாடப்பட்டது. நிறைவு விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.பொருளியல் ஆசிரியர் தேவிகா வரவேற்றார். மாணவர்களின் பெற்றோர் விழாவில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி மாணவர்கள் பூலாங்கிணர் கிராம வீதிகளில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். இயற்பியல் ஆசிரியர் மகுடேஸ்வரன், மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன், மரங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். ஆங்கில ஆசிரியர் ரேணுகா நன்றி தெரிவித்தார்.