வழுக்கும் வாகனஓட்டிகள்
வெள்ளலுார், சக்தி விநாயகர் நகரில், தண்ணீர் குழாய் பதிப்பிற்காகவும், காஸ் குழாய் பதிக்கவும் குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்த பின்னும் சாலையை சீரமைக்கவில்லை. மண்ணாக இருக்கும் சாலை மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக இருக்கிறது. பைக்கில் செல்வோர், நடந்து செல்வோர் அடிக்கடி விழுகின்றனர்.- செந்தில், வெள்ளலுார். வெளிச்சம் தேவை
சரவணம்பட்டி - சத்தி ரேட்டில், துடியலுார் பிரிவு முதல் விசுவாசபுரம் கீரணத்தம் பிரிவு வரை உள்ள சாலையில், பல மின்கம்பங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. கடும் இருளால், குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விபத்துகளால் உயிரிழப்புகள் நிகழும் முன் நடவடிக்கை வேண்டும்.- செந்தில்குமார், சரவணம்பட்டி. தெருவிளக்கு பழுது
செல்வபுரம், ராமமூர்த்தி ரோடு - பேரூர் ரோடு சந்திப்பில், போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள மின்கம்பத்தில், கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் பாதசாரிகள் சாலையை கடக்கவே, மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- பொன்னுசாமி, செல்வபுரம். துார்வாராத வடிகால்
சுங்கம், நிர்மலா கல்லுாரியை ஒட்டியுள்ள மழைநீர் வடிகாலை, நீண்டகாலமாக துார்வாரவில்லை. மண் நிறைந்து காணப்படுவதால், தண்ணீர் செல்ல வழியில்லை. ஆதி திராவிட மகளிர் விடுதி முன், சாலை மோசமாக சேதமடைந்துள்ளதால், இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது.- செந்தில்குமார், பாரதியார் வீதி. வாகனஓட்டிகளுக்கு கடும் சிரமம்
கோவைப்புதுார், ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வரும் வாகனங்கள், சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. மற்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். காலை, மாலை வேளையில் பள்ளி பேருந்துகள், வேன்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.- நந்தினி, கோவைப்புதுார். சேதமடைந்த ரோடு
கணுவாய், வி.எம்.நகர்., கொங்கு நகரில், கடந்த மூன்று ஆண்டுகளாக சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலை முழுவதும் பெரிய, பெரிய பள்ளங்களாக உள்ளன. இரவு நேரங்களில் இப்பகுதியில் அதிக விபத்து நடக்கிறது.- கோகுல், கணுவாய். நடைபாதை சேதம்
போத்தனுார், சர்ச் ரோட்டில், நடைபாதை மோசமாக சேதமடைந்துள்ளது. டைல்ஸ் பெயர்ந்திருப்பதால், நடந்து செல்வோர் சறுக்கி விழுகின்றனர். சாலையும் குழியாக இருப்பதால், வாகனஓட்டிகள் பெரும்அவதிக்குள்ளாகின்றனர்.- தங்கவேல், போத்தனுார். நாறும் பட்டேல் ரோடு
ராம்நகர், பட்டேல் ரோட்டில், பெருமளவு குப்பை குவிந்துள்ளது. பல நாட்களாக தேங்கியுள்ள கழிவு அழுகி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் அருகிலுள்ள கால்வாயினுள் விழுந்து, அடைப்பு ஏற்படுகிறது. சீரான இடைவெளியில் கழிவுகளை அகற்ற வேண்டும்.- மங்கை, ராம்நகர். நாய்களால் அச்சுறுத்தல்
சவுரிபாளையம், ராஜீவ்காந்தி நகர், 31வது வார்டில், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரை துரத்தி அச்சுறுத்துகின்றன. ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு, இரவு முழுவதும் ஊளையிடுகின்றன.- பெத்தபெருமாள், சவுரிபாளையம். குழியை சீரமைக்கணும்
செல்வபுரம், முத்துசாமி காலனியில், சாலை நடுவே பெரிய குழி உள்ளது. வெறும் கற்கள் கொண்டு குழி மறைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், குழி தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். விரைந்து குழியை தார் ஊற்றி சீரமைக்க வேண்டும்.- ராஜேஸ்வரி, செல்வபுரம். டெங்கு இங்கு இலவசம்
பீளமேடு, 26வது வார்டு, நேரு நகர், இரண்டாவது வீதியில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாருவதில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன், குழந்தைகள், முதியவர்கள் அடிக்கடி காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.- தங்கவேல், பீளமேடு. அரைகுறை பணியால் அவதி
சரவணம்பட்டி, விநாயகபுரம், 21வது வார்டு, பாரதியார் வீதியில், குடிநீர் திட்டத்திற்காக சாலை தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட குழியை கான்கிரீட் கொண்டு அரைகுறையாக மூடியுள்ளனர். நடந்து செல்லவும், வாகனங்களை ஓட்டவும் சிரமமாக உள்ளது.- செந்தில்குமார், சரவணம்பட்டி.