உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பில்லுார் அணையில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பில்லுார் அணையில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மேட்டுப்பாளையம்;பில்லூர் அணை, பவானிசாகர் அணை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அணைகளில், வண்டல் மண் எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட எல்லை, பில்லூர் வனப்பகுதியில், 100 அடி உயரத்தில் பில்லூர் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை கட்டி, 55 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அணை கட்டியது முதல் இதுவரை தூர் எடுக்காததால் சுமார், 40 அடிக்கு மேல் வண்டல் மண் படிந்துள்ளது. இதனால் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கும் அளவும் குறைந்துள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்ய, பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பதில்லை. கோவை மாநகராட்சிக்கு மட்டுமே குடிநீர் எடுக்கப்படுகிறது. அணையில் தற்போது 54.75 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதில் 40 அடிக்கு சேரும், சகதியும் இருப்பதால், இன்னும் குறைவான நாட்களுக்கு மட்டுமே, தண்ணீர் எடுக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு அணையை தூர் எடுக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் கூறியதாவது: அணையை தூர் எடுத்தால், அதன் ஆழம், அகலம் அதிகரிக்கும். இதனால் தண்ணீர் தேக்கி வைக்கும் அளவும் அதிகரிக்கும். இந்த வண்டல் மண்ணை, விவசாயிகள் விவசாயத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்தும் போது, பயிர்கள் நன்கு செழித்து வளரும். மேலும் உர செலவுகளும் மிச்சமாகும். அரசுக்கும் செலவு இல்லாமல் அணையை தூர் எடுக்கவும் இது வாய்ப்பாக அமைகிறது. எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், பில்லூர் அணையை தூர் எடுக்க, அனுமதி வழங்க வேண்டும். இதேபோன்று பவானிசாகர் அணை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை