| ADDED : ஏப் 26, 2024 11:26 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 குழுக்கள் வாயிலாக சுழற்சி முறையில், வனப்பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து மேற்கொள்ளப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.மேட்டுப்பாளையம் வனச்சரகம் சுமார் 9 ஆயிரம் எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. குன்னுார், கோத்தகிரி மலைப்பகுதிகள், உட்பட மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள் இந்த வனச்சரகத்தில் உள்ளன. தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஇதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, வனப்பகுதிகளை கண்காணிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செல்கின்றன. தமிழகம், கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் பீடி, சிகரெட் போன்றவற்றை பற்ற வைத்துவிட்டு, வனப்பகுதியில் வீசக்கூடாது,'' என்றார்.---