அன்னுார்:கோடை உழவு செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும், வேளாண் துறை சார்பில், 2000 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. அன்னுார் வட்டாரத்தில், தற்போது மழை பெய்துள்ளது. இதை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து, நீர் தேவை குறைவான பயிர்களான, மக்காச்சோளம், சோளம், பயிறு வகை பயிர்கள், நிலக்கடலை, எள் ஆகியவற்றை சாகுபடி செய்யலாம். வேளாண்துறை வாயிலாக, சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, கோடை உழவு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு, 2,000 ரூபாய், தேசிய உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படுகிறது. அன்னுார் வட்டாரத்தில், 120 ஹெக்டேருக்கு மானியம் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோடை உழவுக்கான மானியம் பெற, உழவு செய்த புகைப்படம், ஆதார் நகல், சிட்டா, வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர் அல்லது வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என, அன்னூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிந்து கூறியுள்ளார்.