உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாய்ஸ் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும் :சொல்கிறார் அண்ணா பல்கலை முன்னாள் இயக்குனர் நாகராஜன்

சாய்ஸ் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும் :சொல்கிறார் அண்ணா பல்கலை முன்னாள் இயக்குனர் நாகராஜன்

கோவை;''சாய்ஸ் தேர்வில் செய்யும் சிறிய பிழைகள் கூட, மாணவர்களுக்கான வாய்ப்புகளை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், கவுன்சிலிங்கின்போது, பதட்டமின்றி கவனத்துடன் செயல்பட வேண்டும்,'' என்று அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் பேசினார்.'தினமலர்' நாளிதழ் சார்பில், 'டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி- 2024' என்ற நிகழ்ச்சி, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது.இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் பேசியதாவது:டி.என்.இ.ஏ., போர்டலில் விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். சாய்ஸ் தேர்வு மற்றும் கவுன்சிலிங் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படும். தரவரிசை பட்டியல் வெளியாகும் முன்னரே இணையதளத்தில் அனைத்து கல்லுாரிகளின் தகவல்களை ஆய்வு செய்து, கல்லுாரி, பாடப்பிரிவு சார்ந்த முன்னுரிமை பட்டியலை, தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.கல்லுாரிகளின் கட்டணம், விடுதி, போக்குவரத்து வசதி, என்.பி.ஏ., அங்கீகாரம் உட்பட அனைத்து விபரங்கள் அடங்கிய கையேடு, இணையதளத்தில் உள்ளது.சாய்ஸ் தேர்வில் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். இணையதளத்தில் உள்ள தகவல்களை கொண்டு, நமக்கு எந்த கல்லுாரியில், எந்த பாடப்பிரிவு கிடைக்கும் என்பதை எளிதாக கணிக்க இயலும்.அதை கொண்டு, அதிக சாய்ஸ் பதிவு செய்யலாம். சாய்ஸ் பட்டியல் தயாரிப்பில் எத்தனை இடங்களை வேண்டுமானலும் தேர்வு செய்யலாம். குறைந்த அளவில் சாய்ஸ் பதிவு செய்பவர்களுக்கு அடுத்தடுத்த கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்காமல், அடுத்த சுற்றுக்கு செல்லும் நிலை ஏற்படும். கல்லூரிகளின் பெயர்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே, பதிவு எண்களைக் கொண்டு கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.சாய்ஸ் தேர்வு முறை துவங்கியதும், முதல் நாளிலேயே சாய்ஸ் தேர்வு செய்து லாக் செய்துவிடாமல், நேரம் ஒதுக்கி யோசித்து, மூன்றாவது நாளில் லாக் செய்வது நல்லது.மூன்றாம் நாள் மாலை 5:00 மணியளவில், லாக் செய்யப்படாவிட்டாலும் பட்டியல் ஆட்டோமெட்டிக்காக எடுத்துக் கொள்ளப்படும். அதன் பின், உத்தேச ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படும்.உத்தேச ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியானதும், இரு நாள்களில் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டியது கட்டாயம். ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்கு உரிய சான்றிதழ்கள், கட்டணத்துடன் செல்லவேண்டும்.உறுதி செய்ய தவறவிட்டாலும், நேரடியாக செல்லாவிட்டாலும் அந்த இடத்தை இழக்கும் நிலை ஏற்படும். சாய்ஸ் தேர்வு செய்யும் விதிமுறைகள் குறித்த பக்கத்தை நன்றாக படித்து ஏதேனும் தவறு செய்திருக்கிறோமா என உறுதி செய்ய வேண்டும்.சாய்ஸ் லாக் செய்யும்போது, ஓ.டி.பி., உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும். அதை கொடுத்து உறுதிசெய்து கொள்ள வேண்டும். யாருடனும் யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை பகிரக்கூடாது. கூடுதல் விவரங்களுக்கு, www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்