| ADDED : ஆக 06, 2024 06:24 AM
பொள்ளாச்சி: 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேப்பங்கன்றுகள் வினியோகம் செய்யப்படவுள்ளது.கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெங்கடாசலம் அறிக்கை:ஒரே பயிர்களை தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், அதிகளவில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதாலும், நிலத்தில் மண் வளம் குறைந்து, நுண்ணுயிர்களும் குறைந்து காணப்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வேளாண் துறையில், முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வேப்பங்கன்றுகள் விநியோகம் செய்யப்படவுள்ளது. வேப்ப இலைகள் சிறந்த பசுந்தழை உரமாகும்.'ஆசாடிராக்டின்' என்னும் மூலப்பொருளை உள்ளடக்கிய வேப்ப எண்ணெய் தெளிப்பதன் வாயிலாக பயிர்களில் பூச்சி தாக்குதலை தடுக்க முடியும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது.எனவே, வேம்பினை பரவலாக்கம் செய்யும் வகையில், வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், 35 ஆயிரம் மரக்கன்றுகளை, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், அடர்வு முறையில் வேப்பங்கன்றுகளை நடவு செய்திட, 200 கன்றுகள் தேவை. அதனை கணக்கிட்டு ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 5 ஏக்கர் அளவில் நடவு செய்திட வேப்பங்கன்றுகள் வழங்கப்படும்.தகவல் அறிய உழவன் செயலி வாயிலாகவும், அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை அணுகியும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.