உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உள்ளூர் முதல் உலக இயந்திரங்கள் வரை பிரமிக்க வைக்கிறது டெக்ஸ்பேர் 2024

உள்ளூர் முதல் உலக இயந்திரங்கள் வரை பிரமிக்க வைக்கிறது டெக்ஸ்பேர் 2024

கோவை:தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) நடத்தும், 'டெக்ஸ்பேர் 2024' கண்காட்சியின் 14வது பதிப்பு, அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடக்கிறது. நாளை நிறைவு பெறும், இந்த கண்காட்சியை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.புதிய தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ள ஜவுளி இயந்திரங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன. கண்காட்சியில் இயந்திரங்களை பதிவு செய்வோருக்கு, தள்ளுபடி சலுகைகளை சில நிறுவனங்கள் அளிக்கின்றன.

நிறுவனங்கள் அசத்தல்

கோவையை சேர்ந்த ஸ்காட் நிறுவனம், பல்வேறு வகையான நுால்களை, பல்வேறு அளவுகளில் தயாரிக்கும் தானியங்கி இயந்திரத்தை தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன முறையில் இயங்கும் இந்த இயந்திரம், பேன்சி நுால்களை மட்டுமின்றி, சாதாரண நுால்களுக்கும் எளிதாக மாற்றிக் கொள்ளும். இந்த இயந்திரம், கழிவு பஞ்சுகளிலிருந்து துணி வகைகளை உருவாக்க பயனுள்ளதாக உள்ளன. மல்டி கவுன்ட், மல்டி ட்விஸ்ட், மல்டி எபக்ட் என்ற பலவித நுால்களை தயாரிப்பதில் வல்லது. கோவையை சேர்ந்த ரிஷிடெக் நிறுவனம், பழுது பார்க்கவும், உதிரி பாகங்களை மாற்றவும் உதவுகிறது. எலக்ட்ரானிக், மெக்கானிக் பழுதுகளை நீக்கி, புதிய பாகங்களை பொருத்தும் பணியை செய்கிறது. லட்சுமி இன்ஜினியரிங் நிறுவனம், ஜவுளி இயந்திரங்களை ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யவும் உதவுகிறது. இயந்திரங்களை ஆராய்ந்து, அவற்றை மதிப்பீடு செய்வதிலும் உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் விஜயேஷ் பாபு கூறுகையில், இந்தியாவிலிருந்து ஜவுளி இயந்திரங்கள் பல்வேறுநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அதேபோன்று, ஜெர்மன், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியும் செய்யப்படுகின்றன. வியட்நாம் நாட்டின் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் நன்றாக இருக்கும். விலை குறைவாக கிடைப்பதோடு, தொழில்நுட்பத்திலும் இவை முன்னோடிகளாக உள்ளன. இயந்திரங்களை இறக்குமதி செய்வது முதல் அதை நிறுவி, இயக்குவது வரை அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம், என்றார்.

பஞ்சாக, நுாலாக மாற்றலாம்

ஆயத்த ஆடைகள், துணி வகைகள் போன்றவைகளை மீண்டும் பஞ்சாக அரைத்து, நுாலாக மாற்றும் வகையில் இயந்திரங்கள் உள்ளன. இந்த நுால் வகைகளை மீண்டும் துணியாக மாற்ற முடியும். மறு சுழற்சி முறையில் துணிகளை பயன்படுத்தும் இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நுால்களை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுதல், பேக்கிங் செய்தலுக்கு உதவும், தானியங்கி இயந்திரங்கள் அனைவரையும் கவர்கின்றன. நுால் முதல் துணி வரை மட்டுமல்ல, அவற்றை தயாரிக்கும் இயந்திரங்கள், இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதிலும், முன்னணியில் உள்ளது கோவை நகரம். புதிய தொழில் தொடங்குவோர், ஜவுளித்தொழில் பற்றி அறிய விரும்புவோர் அவசியம் காண வேண்டிய கண்காட்சியாக மாறியுள்ளது டெக்ஸ்பேர் 2024!.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை