| ADDED : ஆக 23, 2024 01:43 AM
கோவை:அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் டாக்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.கோல்கட்டாவில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் பெண் டாக்டரிடம் அத்துமீற முன்யன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.இதை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'டாக்டர்களுக்கு தனிப்பட்ட பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்; அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' போன்ற பல்வேறு கோரிக்கைகளை, டீன் நிர்மலாவிடம் முன் வைத்தனர்.இதையடுத்து டீன் நிர்மலா, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம், 'அரசு மருத்துவமனையில் போலீசார் தொடர்ந்து ரோந்து வர வேண்டும்; புறகாவல் நிலையத்தை அதிகரிக்க வேண்டும்; இரவு நேரத்தில் பாதுகாப்பை பலபடுத்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். அவரும் அனைத்து கோரிக்கைகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து, போலீஸ் உயரதிகாரிகள் நேற்று அரசு மருத்துவமனைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கூறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தினர்.மேலும், மருத்துவமனை வளாகத்தில் விளக்கு ஏரியாத பகுதிகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், வானக நிறுத்தம் உள்ள பகுதிகள், பயன்பாடு குறைந்த பகுதிகள் எவை என, கேட்டு அறிந்தனர். அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் டாக்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.