| ADDED : மே 17, 2024 10:46 PM
சூலூர்:ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்க ஹிந்து சமய அறநிலையத்துறை இலவசமாக தானியங்கள் வழங்க வேண்டும், என, கோவில் பூஜாரிகள் நல சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில் பூஜாரிகள் நல சங்கம் சார்பில், அரசூர் தங்க நாயகி அம்மன் கோவிலில் ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்,நடந்தது. முகாமின் நிறைவாக கோவில் பூஜாரிகள் நல சங்க கோவை மாவட்ட மாநாடு, தலைவர் வாசு தலைமையில் நேற்று நடந்தது. பொருளாளர் சுந்தரம், செயலர் சங்கர், மாவட்ட தலைவர் மணி, செயலாளர் நரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்க அறநிலையத்துறை இலவசமாக தானியங்கள் வழங்க வேண்டும். ஒரு கால பூஜை திட்டத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களுக்கு விரிவு படுத்த வேண்டும். ஓய்வூதியம் பெற வருமான உச்சவரம்பாக உள்ள, 72 ஆயிரம் ரூபாயை, 1 லட்சமாக உயர்த்த வேண்டும். ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களின் பூஜாரிகளுக்கு ஊக்கத்தொகையாக, 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதை, 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். நலவாரிய உறுப்பினர்களுக்கு மாத ஊதியமாக, 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வழிபாட்டு பயிற்சி முகாம்களை வட்டாரம் தோறும் அறநிலையத்துறையே நடத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.