| ADDED : ஜூன் 08, 2024 12:28 AM
பொள்ளாச்சி;மரப்பேட்டை முதல், ஊஞ்சவேலம்பட்டி வரையிலான நான்கு வழிச்சாலை, மழை காரணமாக, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.பொள்ளாச்சி அருகே,மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலை, 4.5 கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்க, சென்டர்மீடியன், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், பெய்த மழையினால், நான்கு வழிச்சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இரவில், பள்ளங்களை அடையாளம் காண முடியாமல் வாகன ஓட்டுநர்கள் பரிதவித்து வருகின்றனர்.இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், ரோட்டில் உள்ள பள்ளங்களால் தடுமாறி விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. விபத்தை தடுக்கும் விதமாக சாலையை புதுப்பிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:ரோட்டில் ஆங்காங்கே இருந்த சிறு, சிறு பள்ளங்களை சீரமைக்காததால், மழையால் அவை தற்போது பெரிய பள்ளங்களாக மாறியுள்ளது. இவற்றில் மழை நீர் நிரம்பினாலும் அடையாளம் காண முடியாது.இரவில் அதிவேகமாக வாகனங்களில் செல்வோர், திடீரென பள்ளங்களைக் காண்டு, வேகத்தை குறைக்க முற்பட்டாலோ, திசை திருப்ப முயன்றாலோ விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. சாலையை விரைந்து செப்பனிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.