ஆடி மாதத்தில் ஐப்பசி போல அடைமழை பெய்வதால், கோவையிலுள்ள சிறு வியாபாரிகள் பிழைப்புக்கு வழியின்றி, வேதனை அடைந்துள்ளனர்.கோவையில் கடந்த ஏப்ரலில், 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டியது. இதனால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டன. நகரின் நிலத்தடி நீர் மட்டமும் கீழே இறங்கி, பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தென் மேற்குப் பருவமழை காலத்தில், சிறிது மழை பெய்தாலும் போதுமென்று மக்கள் பிரார்த்திக்கும் நிலை ஏற்பட்டது.வழக்கமாக, கோவைக்கு தென்மேற்குப் பருவமழையை விட, வடகிழக்குப் பருவமழைதான் அதிகமாகப் பெய்யும். நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான், அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்து, நிரம்பி வழியும். ஆனால் இந்த ஆண்டில் தென் மேற்குப் பருவமழையே, 55 சதவீதத்துக்கும் அதிகமாகப் பெய்துள்ளது. அதிலும் கடந்த சில நாட்களாக, தொடர் மழை பெய்து, நகரைக் குளிர்வித்து வருகிறது.ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்; இதமான காலநிலை நிலவும். இந்த காலகட்டத்தில், நகைக்கடை, ஜவுளிக்கடை, வாகன விற்பனை நிறுவனங்கள் என எல்லா வியாபார நிறுவனங்களும், தள்ளுபடிகளை அறிவித்து, மக்களை ஈர்ப்பது வழக்கம். இதனால் தீபாவளி, பொங்கலுக்கான ஆடை, அணிகலன்களை மக்கள் இப்போதே வாங்கிக் கொள்வர்.ஆனி மாதத்திலேயே ஆடி மாதத்துக்கான 'ஆபர்'களை நிறுவனங்கள் அறிவிப்பதும் இதனால்தான். இந்த ஆண்டிலும் வழக்கத்தை விட அதிகமாக தள்ளுபடி, கவர்ச்சிப் பரிசுத் திட்டங்களை அறிவித்து, நிறுவனங்கள் மக்களை ஈர்த்து வருகின்றன. இந்த காலகட்டத்தில், ஒப்பணக்காரவீதி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், நுாறடி ரோடு, ராஜவீதி உள்ளிட்ட கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.பெரும் திரளாகக் கூடும் மக்களை நம்பி, கடை வீதிகளில் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், தங்கள் கடைகளை விரிப்பார்கள். ஸ்டாண்ட்கள் வைத்து, தள்ளுவண்டிகளில், ரோட்டோரங்களில், கார்களில் என பல விதமான பொருட்களை, மிகவும் மலிவான விலையில் விற்பார்கள். இவற்றை வாங்குவதற்கென்றே, பெரும் கூட்டமும் திரளும்.ஆடியில் துவங்கி, ஐப்பசி மாதம் வரையிலும்தான், இந்த வியாபாரிகள் வியாபாரம் பார்த்து, ஆண்டு முழுவதும் தங்கள் குடும்பத்துக்கு வருவாய் தேடிக் கொள்வார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக, கோவை நகரில் ஐப்பசி மாதத்தில் பெய்வது போல, பகல் இரவாக அடைமழை பெய்வதால், சிறு வியாபாரிகள் யாரும் கடை போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் அன்றாடப் பிழைப்புக்கே வழியில்லாமல் சிறு வியாபாரிகள், கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் காலையிலேயே மழை துவங்கிவிடுவதால் கடை போட முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், சிறு வியாபாரிகளுக்கு நிரந்தரமான வருவாய் ஏற்படுத்தும் வகையில், தனி மார்க்கெட்டை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், நகருக்குள் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகம், இப்போதுள்ள சிறு வியாபாரிகளை முதலில் கணக்கெடுக்க வேண்டும்; அவர்களுக்கு, மழை, வெயில் எதுவும் தாக்காத வகையில், டில்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் இருப்பது போன்று, 'பார்க்கிங்' வசதியுடன் கூடிய மலிவு விலை மார்க்கெட்டை ஏற்படுத்த வேண்டும்.அப்படிச் செய்தால், நகருக்குள்ளும் ஆக்கிரமிப்புகள் இருக்காது; போக்குவரத்து நெரிசலும் குறையும். மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும், வியாபாரிகள் நல அமைப்புகளின் நிர்வாகிகளும் இணைந்து, இதற்கு அரசிடம் நிதியைப் பெற வேண்டும்; அப்படிச் செய்வது சீர்மிகு கோவையை உருவாக்க உதவுவதோடு, சிறு வியாபாரிகளுக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும்.