உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்க இலக்கிய கால வரலாற்று சுவடுகள்; ஆவணப்படுத்தும் ஆர்வலர்கள்

சங்க இலக்கிய கால வரலாற்று சுவடுகள்; ஆவணப்படுத்தும் ஆர்வலர்கள்

உடுமலை : மேற்குத்தொடர்ச்சி மலையில், சங்க இலக்கிய காலத்தைச்சேர்ந்த குமணன் மன்னரின் வரலாற்றுச்சான்றுகளை ஆய்வு செய்து, ஆவணப்படுத்தும் பணியில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.சங்க இலக்கிய பாடல்கள் வாயிலாக, உடுமலை அருகே கொழுமம் சுற்றுப்பகுதிகளை குமணன் மன்னர் ஆட்சி செய்தது தெரியவந்தது.இப்பாடல்களில், பல்வேறு சிறப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், காலப்போக்கில், போதிய விழிப்புணர்வு இல்லாமல், குமணன் குறித்த வரலாற்று சான்றுகள் படிப்படியாக மறைந்து விட்டது.இதையடுத்து, சங்க இலக்கிய பாடல்கள் கிடைத்த தரவுகள் அடிப்படையில், குமணன் மன்னரின் சான்றுகளை கண்டறிந்து, அவற்றை ஆவணப்படுத்தும் பணியில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி மலையில், அம்மன்னர் சார்ந்த வழிபாட்டு தலங்கள் குறித்து முதற்கட்ட ஆய்வை துவக்கியுள்ளனர்.அக்குழுவினர் கூறியதாவது: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், கொடைக்கானல் கூக்கல் முதல் கொழுமம் குதிரையாறு வரை, குமணன் மன்னரின் பல்வேறு வரலாற்று சான்றுகள் வழிபாட்டுத்தலங்களாக இன்றளவும் மக்களால், பாதுகாக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில், கொடைக்கானல் மலைச்சரிவில், அமைந்துள்ள பாப்பிலியம்மன் கோவில், தொன்மை வாய்ந்ததாகும். கூக்கல் என்பது குமணன் கல் எனவும் தெரிவிக்கின்றனர்.இதே மலைத்தொடரில், அமைந்துள்ள தன்னாசியப்பன் கோவிலில், பெருஞ்சித்தனாருக்கு குமணன் தன்னுடைய உடைவாள் கொடுத்த இடமாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர்.சங்க இலக்கிய காலத்தை சேர்ந்த மன்னரின் வரலாற்று சான்றுகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவது வியப்பளிக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்திஸ்வரி, வரலாற்று ஆர்வலர்கள் சிவக்குமார், அருட்செல்வன் உள்ளிட்டோர் இக்களப்பயணத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை