உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்கள் ஊரில் அரசு நிர்வாகம் எப்படியிருக்கு! கிணத்துக்கடவில் கலெக்டர் களஆய்வு

உங்கள் ஊரில் அரசு நிர்வாகம் எப்படியிருக்கு! கிணத்துக்கடவில் கலெக்டர் களஆய்வு

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.மக்கள் குறைகளை அறிந்து, விரைந்து தீர்வு காண தமிழக அரசு சார்பில் 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' என்ற திட்டம் துவங்கப்பட்டது.இதில், மாவட்ட கலெக்டர் மற்றும் பிற அரசு அதிகாரிகள் என ஒவ்வொருவரும், மாதத்தில் ஒரு நாள், காலை 9:00 மணி முதல் மறுநாள் காலை 9:00 மணி வரை, தாலுகா அளவில் தங்க வேண்டும். அரசு அலுவலங்கங்கள் மற்றும் கள ஆய்வில் ஈடுபட்டும், மக்களின் குறைகளை கேட்டறிந்தும், அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றி மக்களுக்கு சென்றடைதல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நேற்று, 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்துக்கான கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி கட்டடங்கள் மற்றும் செயல்பாடுகள், அங்கன்வாடி, ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அரசு மருத்துவமனை முறையாக செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யும் படி கலெக்டர் அறிவுறுத்தினார்.மேலும், ஊராட்சியில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி சுத்திகரிப்பு தன்மை, பள்ளியில் கல்வி இடைநின்ற மாணவர்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள், திடக்கழிவு மேலாண்மை, அரசு திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யுமாறு கூறினார்.இதையடுத்து, அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றனர். மாவட்ட கலெக்டர் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.இதில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை இருப்பு விபரம், விலை மற்றும் விற்பனை கூடத்தில் பதிவு செய்த விவசாயிகள் எண்ணிக்கையை பார்வையிட்டார். கல்லாங்காட்டுபுதூரில் உள்ள அங்கன்வாடி மையம், சி.டி.சி.சி., வங்கி செயல்பாடுகளை பார்வையிட்டார்.கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை, கல்வி இடைநின்றல் மாணவர்கள் விபரங்கள், சைக்கிள் தரம் குறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரித்தார். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து, சாலை, குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு செய்தார். இதே போன்று அரசு அதிகாரிகள் ஊராட்சி வாரியாக ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து பகுதியிலும் ஆய்வு முடிந்ததும், ஆய்வறிக்கை தயாரிக்கப்படும். அதில், தாலுகாவில் நிலவும் குறைகள், அரசு அலுவலக செயல்பாடுகளில் இருக்கும் பிரச்னைகள் களையப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை