பொள்ளாச்சி:அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்படும் போது, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களை, உறுப்பினர்களாக சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் உள்ள மேலாண்மை குழு, மறு கட்டமைப்பு செய்யப்படும் நிலையில், முதற்கட்டமாக பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.இதற்காக, ஒவ்வொரு பள்ளியில் இருந்து, அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், மேலாண்மை குழுவின் செயல்பாடு, அதிகாரம் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படவுள்ளது.தொடர்ந்து, 10 மற்றும் 17ம் தேதி தொடக்கப்பள்ளி, 24ம் தேதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி, 31ம் தேதி நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழுவின், புதிய தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.அதில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் பெற்றோர் உறுப்பினர்களாக வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி மேலாண்மைக் குழுவில், அந்த பள்ளியில் படிக்கும் மாணவரின் பெற்றோர் ஒருவர் தலைவராக இருப்பர். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியின் பெற்றோர் துாய்மைப் பணியாளராக இருந்தால், துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவர்.குறிப்பாக, உறுப்பினர்களின் எண்ணிக்கையில், பெண்கள், 70 சதவீதம் அளவில் இருப்பர். அவர்களே, தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவது தவிர்க்கப்படும். காரணம், அவ்வகுப்பு மாணவர்கள், ஓராண்டு படிப்பு முடிந்து வேறு பள்ளிக்கு மாற வாய்ப்புள்ளதால், மேலாண்மை குழு உறுப்பினர்களை புதிதாக தேர்வு செய்ய வேண்டும்.அதனை தவிர்க்கும் வகையில், பெரும்பாலும், இவ்வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை உறுப்பினர்களாக சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட மாட்டது.இவ்வாறு, கூறினர்.